தோனிக்கு வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள்!!!

Jul 07, 2020 10:26 PM 3437

இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னரான தோனியின் 39-வது பிறந்த நாள் இன்று கொண்டாட்டப்படுகிறது... கிரிக்கெட் உலகில் கடந்த 16 ஆண்டுகளாக சூரியனைபோல் பிரகாசித்த அவரது பயணம். பெருங்கனவுகளுடன் அறிமுகம் ஆன முதல் போட்டி ரன் ஏதும் அடிக்காமல் ஆட்டம் இழந்த விரக்தி அன்று தலைகுனிந்து பெவிலியன் திரும்பும் இந்த இளைஞனுக்கு தெரியாது வருங்காலத்தில் இந்தியாவை தலைநிமிர வைக்கப்போகிறோம் என்று. ரவிசாஸ்திரி வர்ணித்த இந்த வரிகளை கிரிக்கெட் ரசிகர்கள் எவரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமாட்டார்கள். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பல்லாண்டு கால ஏக்கம், கனவு, ஆசை எல்லாம் நிறைவேறிய நாள் அது.. கிரிக்கெட் உலகில் இன்று அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது இந்தியா. இதற்கு அடித்தளம் இட்டது கங்குலி என்றால் அதில் கோட்டை கட்டியது தோனி. கிரிக்கெட்டில் நல்ல பேட்ஸ்மேன் என பலரை சொல்லலாம் சிறந்த பவுலர் என சிலரை சொல்லாம் தேர்ந்த ஆல்ரவுண்டர் என 2 மூன்று பேரை கொண்டாடலாம். ஆனால் மிகச்சிறந்த கேப்டன் என உச்சிமுகர தோனியைவிட்டால் வேறு பொருத்தமானவர் இல்லை காரணம் அழுத்தமான, பதற்றமான சூழலிலும் அவர் பீல்டிங்கை செட் செய்யும் அழகே தனி மிடில் ஆர்டர் சொதப்பினாலும், தோனி பார்மில் இல்லாவிட்டாலும் அவர் களத்தில் இருக்கும் கடைசி நொடிவரை பதற்றத்திலேயே இருக்கும் எதிரணி.

ஹெல்மெட், கிளவுஸை கழட்டி திரும்பவும் மாட்டிய பின் தோனி அடித்த சிக்ஸர்களுக்கு கிடைத்த முத்தங்கள் எண்ணற்றவை. கூடவே அவரது விவேகமான அதேநேரம் மின்னல் வேக ஸ்டம்பிங்களும், ரன் அவுட்களும் அபாரமானவை. வங்கதேச அணிக்கு எதிராக அவர் வகுத்த கடைசி நேர வியுகத்தை இப்போது பார்த்தாலும் சிலிர்த்துப்போவார்கள் ரசிகர்கள். டி-20 உலகக்கோப்பை, ஒரு நாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்தும் மூன்று முக்கிய தொடர்களையும் தன்வசமாக்கிய முதல்வன் தோனி... இவரது வாழ்க்கை பயணத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும், தமிழகத்திற்கும் முக்கிய இடம் உண்டு.. சர்வதேச போட்டிகளில் கேப்டன் கூல் என சிலாகிக்கப்பட்ட தோனியை தல என உணர்ச்சி பொங்க கொண்டாடினர் தமிழக ரசிகர்கள்.. ஐபிஎல்-லில் மூன்று முறை சாம்பியன் பட்டம், 7 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி, பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் அரையிறுதிக்கு சென்ற ஒரே அணி சென்னை சூப்பர்கிங்ஸ். இதை சாதித்த பெருமை அனைத்தும் தல தோனியையே சேரும். முதல் போட்டியில் ரன் அவுட் ஆகி சென்றதை போல் கடைசி போட்டியிலும் ரன் அவுட் ஆனார். இதுவே தோனியின் கடைசி போட்டியாக இருக்குமா எனும் விவாதங்களும் தொடர்கின்றன. அவரது இடத்தை நிரப்ப பல வீரர்கள் உள்ளனர் ஆனால் அவர்களில் யாரும் தோனியாகிவிட முடியாது. 38 வயது முடிந்து 39-வது வயதில் அடியெடுத்து வைக்கும் தோனிக்கு வாழ்த்துமழை பொழிந்து வருகின்றனர் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள்.

Comment

Successfully posted