குடை தினம் எப்படி உருவானது தெரியுமா? - சுவாரஸ்யமான தகவல்கள்!

Feb 10, 2021 11:40 AM 4994

மழை வருது மழை வருது குடை கொண்டு வா என்ற பாடல் அனைவரும் அறிந்ததே.. கடும் வெயில் மற்றும் மழைக் காலத்தில் நமது இன்றியமையாத பொருள் என்றால் அது குடை தான்... உலக குடை தினமான இன்று குடை தோன்றிய வரலாறு குறித்து பார்க்கலாம்...

வெண்கொற்றக்குடையின் கீழ் ஆட்சி நடத்தியவர்கள் பண்டைய தமிழ் மன்னர்கள். அந்தவகையில் மனிதருக்கும் குடைக்குமான தொடர்புக்கு நெடிய வரலாறு உண்டு. தமிழர்களும், சீனர்களும் பண்டைய காலத்திலேயே குடையை பயன்படுத்தியிருப்பதை பறைசாற்றுகின்றன வரலாற்று தரவுகள்.

எகிப்தும் குடையின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. அங்கு மன்னர்கள் மட்டுமே குடைகளை பயன்படுத்த உரிமை இருந்தது. கிமு 3-ம் நூற்றாண்டில் பண்டைய ரோமில் சூரிய கதிர்களிடம் இருந்து காத்துக் கொள்ள பெண்கள் மட்டுமே குடையை பயன்படுத்தினர். 17-ம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்கள், உயர்தட்டு மக்களின் அடையாளமாக குடைகளை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

மன்னர்கள் உயர் வகுப்பினர் மட்டுமே பயன்படுத்தி வந்த குடையை வியாபார பொருளாக மாற்றி அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்தவர் ஆங்கிலேய வியாபாரி ஜோனாஸ் ஹான்வே. இவர் 1750- களில் குடைகளை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். ஆனால் உலகின் முதல் அதிகாரப்பூர்வ குடை கடை ஜேம்ஸ் ஸ்மித் அண்ட் சன்ஸ் என்ற பெயரில் லண்டனில் 1830-களில் ஆரம்பிக்கப்பட்டது. இப்போதும் அந்தக் கடை லண்டனில் இயங்கி வருகிறது. 1852-ம் ஆண்டில் சாமுவேல் ஃபோக்ஸ் என்பவர் குடைகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் தற்போதைய வடிவத்தை கண்டடைந்தார்.

ஆண்டுகள் கடக்க கடக்க பலவிதமான குடைகள், பல்வேறு வடிவங்களில் அவரவர் விருப்பத்திற்குகேற்ற வகையில் நடைமுறைக்கு வந்துவிட்டது. மழை இருக்கும் வரை, வெயில் அடிக்கும் வரை மனிதர்களுடன் குடையும் இருக்கும்.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக திவ்யா...

 

Comment

Successfully posted