ஆதரவின்றி தவித்தவர்களுக்கு தாயாக மாறிய மருத்துவர்கள் - கண்கலங்க வைக்கும் மனிதர்கள்

Dec 10, 2020 07:50 AM 1117

சொந்தம் என சொல்லிக்கொள்ள யாரும் இல்லாமல் ஆதரவின்றி இருந்தவர்களுக்கு, பெற்ற தாயாகவும், சகோதரியாகவும் மாறியுள்ளனர் ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். சிகிச்சை முடிந்தாலும், காப்பகத்திற்கு செல்ல மாட்டோம் என பாசப் போராட்டம் நடத்தி வரும் நெகிழ்ச்சியான நிகழ்வு பற்றிய செய்தித்தொகுப்பைப் பார்க்கலாம்......

சொந்தம் என கூற யாரும் இல்லை. சொந்தம் கொண்டாட வீடும் இல்லை. இப்படி வேதனையான சூழலில் கிடைப்பதை வைத்து சாலையோரம் உயிர் பிழைத்து வந்த இவர்களுக்கு, சற்று மனஆறுதலை தந்துள்ளது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.

ஆதரவின்றி நோய்வாய்ப்பட்டு வாழ்ந்து வந்தவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் விதமாக, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு வார்டை உருவாக்கி, மறுவாழ்வு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்துள்ளார் மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன்.

25க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவும், மருந்தும் நேரம் தவறாமல் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்க்கின்றனர் மருத்துவமனை செவிலியர்கள்.

ஒருமுறையாவது அம்மாவையும், சகோதரரையும் பார்க்க வேண்டும் என மனதில் இருக்கும் ஆசையை வெளிப்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன், தனக்கு சிகிச்சையளித்து கவனித்துக் கொள்ளும் செவிலியரை அழைத்து தனது தாய் என அறிமுகப்படுத்துவது நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

தனக்கு சிறுவயதில் இருந்தே தாய், தந்தை இல்லை; இப்போது 80 வயது ஆகிறது; இத்தனை ஆண்டுகள் ஆதரவின்றி தெருவிலேயே காலத்தை போக்கினேன் என மூதாட்டி ஒருவர் கூறும் வார்த்தைகள் கல் நெஞ்சையும் கரைய வைக்கிறது.

அன்பும், அரவணைப்பையும் மறந்திருந்த இவர்களிடம், செவிலியர்கள் காட்டும் அன்பு அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள முதியவர்கள், சிகிச்சை முடிந்த பின்னரும், காப்பகம் செல்ல மறுத்து இங்கேயே இருக்கிறோம் என ஏக்கத்தோடு கூறுகின்றனர். இது, ராஜீவ் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்களின் அர்ப்பணிப்பை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் ஆன்ட்ருவுடன் செய்தியாளர் குணா.

 

 

Comment

Successfully posted