ஆங்கிலம் தெரியாதா..? பிரிட்டனில் வேலை இல்லை : பிரிட்டன் அதிரடி அறிவிப்பு

Feb 21, 2020 09:51 AM 376


பிரிட்டனில் பணியாற்ற விரும்புபவர்களுக்கான புதிய விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த விதிகளின்படி ஆங்கிலம் தெரியாதவர்களால் இனி பிரிட்டனில் பணிவாய்ப்பைப் பெற முடியாது. பிரிட்டனின் புதிய விதிகள் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு ..

பிரக்ஸிட் திட்டத்தை ஐரோப்பிய யூனியன் ஏற்றுக் கொண்டதை அடுத்து, பிரிட்டன் தற்போது தனக்கான புதிய சட்டங்களை வகுத்து வருகின்றது. பிரக்ஸிட் நிறைவேற்றத்திற்கு முன்பு பிரிட்டன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அதிபர் போரிஸ் ஜான்சன் இந்த சட்டங்களின் மூலம் செயல்படுத்த உள்ளார்.
 
இதன் முதல்கட்டமாக, பிரிட்டனில் பணியாற்ற நினைப்பவர்களுக்கு ஆங்கிலம் பேசும் திறன் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களால் இனி பிரிட்டனில் பணியாற்ற முடியாது.
 
முன்னர் பிரிட்டனின் உணவகங்கள், ஆலைகள் போன்றவற்றில் பணியாற்ற படிப்பறிவற்ற கீழ்நிலை ஊழியர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வேலைக்கு எடுக்கப்பட்டனர். இனி அப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
 
மேலும் ஆஸ்திரேலிய நாட்டின் முந்தைய பணி விதிகளை பிரிட்டன் இனி பின்பற்ற உள்ளது. இதனால், ஒருவர் பிரிட்டனில் பணியாற்ற விண்ணப்பிக்கும் போது, அவருக்கு யாராவது பணி உத்திரவாதம் அளிக்க முன்வர வேண்டும். இதனால் இனி பிரிட்டனுக்கு சென்ற பின்னர் வேலை தேடிக் கொள்ள விரும்பும் நபர்களுக்கு விசாவே கிடைக்காது.
 
புதிய விதிகளின்படி, தகுதிப் பட்டியலில் 70 புள்ளிகள் அல்லது அதற்கும் மேல் பெறுபவர்களுக்கு மட்டுமே பிரிட்டனில் பணியாற்ற அனுமதி கிடைக்கும். மேற்கண்ட 2 தகுதிகளும் இருக்கும் நபர் பணி உத்திரவாத்துக்கான 20 புள்ளிகள், பணியாற்றும் திறனுக்கான 20 புள்ளிகள், ஆங்கிலம் பேசும் திறனுக்கான 10 புள்ளிகள் - என 50 புள்ளிகளைப் பெற்று விடலாம். மேலும் உள்ள 20 புள்ளிகளை அவர் பிற திறன்களின் அடிப்படையில்தான் பெற வேண்டும்.
 
எனவே இனி அமெரிக்காவில் பணியாற்றுவதற்குப் பெறப்படும் விசாவை விடவும் கடினமான விசாவாக பிரிட்டனில் பணியாற்றும் விசா மாற உள்ளது. பிரிட்டனில் பணியாற்ற இந்தியர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டும் நிலையில், இந்த நடைமுறைகள் அவர்களின் கனவுகளை தகர்க்கக் கூடியவையாக உள்ளன. மேலும் பிரிட்டனில் பணியாற்றும் அயல்நாட்டினருக்கான ஊதிய உச்சவரம்பும் 30 ஆயிரம் பவுண்ட் என்பதில் இருந்து, 25,600 பவுண்டுகளாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதுவும் தொழிலாளர்களைப் பாதிக்கும்.  

இன்னொரு பக்கம், இந்தப் புதிய விதிகளால் பிரிட்டனில் உள்ள உணவகம், ஆலைகள், கறிக்கடைகள் - உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே இது குறித்த கேள்விகளை பிரிட்டன் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.

Comment

Successfully posted