விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் பாகங்கள் தானம்

Feb 09, 2019 04:50 PM 354

விபத்தில் மூளைச்சாவு அடைந்த திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளரின் உடல் உறுப்புகள், தானம் செய்யப்பட்டன. இதன்மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டையை சேர்ந்த பலசரக்கு கடை உரிமையாளர் காமராஜ். இவர் கடந்த வாரத்தில் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வந்தபொழுது, விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம் அடைந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதன் பிறகு, மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இந்நிலையில் உறவினர்கள் அனுமதியுடன், காமராஜின் சிறுநீரகம், கண், இதயம், கல்லீரல் ஆகியவற்றை மருத்துவ குழுவினர் 5 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். பின்னர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனையில் பாதிப்படைந்தவர்களுக்கு பொருத்தினர். மேலும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காமராஜின் இதயம் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதன்மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted