"திமுக அரசின் வாய்ச்சவடாலால் மாணவன் பலி" - எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி

Sep 12, 2021 08:23 PM 1945

நீட் தேர்வை நடத்தவிட மாட்டோம் என்று கூறிய விடியல் அரசின் வாய்ச் சவடாலால் மாணவன் தனுஷ் உயிரிழந்துள்ளதாகவும், நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை இனியாவது மாணவர்களுக்கு, திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்,

ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பதுதான் என்று கூறி சட்டமன்ற பிரசாரத்தின் போது, தேர்தல் மேடைகளில் அம்மா அரசிற்கு எதிராக வெற்று முழக்கமிட்டு மக்களை திசை திருப்பி, திமுகவினர் தேர்தலில் வெற்றி பெற்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் சட்டசபையில், நீட் தேர்விற்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு நேரடியாக பதில் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, முதலமைச்சர், மழுப்பலான பதிலையே அளித்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக அரசு அமைத்த ஒய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவிற்கு எதிரான மனுவை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஏதோ, அன்றே இந்த அரசு நீட் தேர்வை ரத்து செய்துவிட்டது போல வானத்திற்கும், பூமிக்கும் குதித்து ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டதாக விமர்சித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில், ஆட்சிக்கு வந்த 24 மணி நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும், அதற்கான வழி எங்களுக்குத் தெரியும் என்றும் ஸ்டாலின் வாய்வீரம் காட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் இனி நீட் தேர்வு நடைபெறாது என்று கூறி, வானத்தையே வில்லாக வளைப்போம் என்பது போல் மாணவச் செல்வங்களை ஏமாற்றும் விதத்தில் பேசியதன் விளைவாக, நாம் இன்று மேலும் ஒரு மாணவச் செல்வத்தை, நீட்டிற்கு தாரைவார்த்துள்ளோம் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் , கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ், நீட் தேர்வில் தோல்வி அடைந்தால் தனது மருத்துவர் கனவு கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தி அறிந்து மிகுந்த கவலையும் , மனவருத்தமும் அடைந்ததாகவும், தமிழக மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

விடியல் அரசின் வாய்ச்சவடாலால் மாணவச்செல்வத்தை இழந்து பெற்றோர் தவிக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

image

ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பான தலைவர், சமுதாயத்தில் எந்த ஒரு கருத்தையும் சொல்லும்போதும், அது சமுதாயத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்னென்ன என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து கூற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக்கூறியுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா ? நடைபெறாதா ?, நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக அறிவுறுத்தி, முறையான பயிற்சி அளித்து, குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் என்று அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு சரியான பதிலைக் கூறி மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால், மாணவன் தனுஷின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம் என குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாணவச் செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்கக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு நடக்குமா ? நடக்காதா ? என்று மாணவர்களின் குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டி, சட்டப் பேரவையில் மூன்று முறை தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிய நிலையில், இந்த அரசு தெளிவான பதில் அளித்திருந்தால் இன்று ஒரு உயிர் பலியாகி இருக்காது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல், நீட் தேர்வு முடிந்த பிறகு சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் கொண்டுவருவதாக திமுக அரசு கூறியுள்ளதாகவும் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

image

"சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்" என்ற வள்ளுவர் வாக்கின் அர்த்தத்தை முழுமையாக உணர்ந்த நாங்கள், நீட் தேர்வு உட்பட தமிழகத்தை பாதிக்கும் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், ஒவ்வொரு அடியையும் மிகவும் எச்சரிக்கையாக எடுத்து வைத்து செயல்பட்டோம் என கூறியுள்ளார்.

மேலும் திமுகவை போல் நாங்கள் இதை அரசியலாக்க விரும்பவில்லை எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாண்புடன் தெரிவித்துள்ளார்.

இனியாவது மாணவச் செல்வங்களுக்கு நீட் தேர்வு பற்றிய உண்மையான நிலையை உணர்த்துங்கள் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ள அவர், மகனை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மேலும் தனுஷின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

 

Comment

Successfully posted