அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு: பிரதமர் மோடி ட்விட்டரில் கருத்து

Jun 25, 2019 05:08 PM 93

அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு, இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவசர நிலையின் கருப்பு நாட்களை நினைவு கூர்ந்தனர்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மக்களவை தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றதாகக் கூறி, 1975 ஜூன் 12-ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் அவரது வெற்றியைச் செல்லாதது என அறிவித்தது. மேலும், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது. இதையடுத்து, 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனம் செய்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 352-வது பிரிவைப் பயன்படுத்தி, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பத்திரிகைகள் முடக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் இந்திரா காந்திக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து 1977 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி அவசர நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஏறத்தாழ 19 மாதங்கள் அமலில் இருந்த அவசர நிலை காலத்தை இருண்ட காலம் என்றே வரலாற்று அறிஞர்கள் வர்ணிக்கின்றனர். இதையடுத்து 1977 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது. இந்திரா காந்தியும், வருண் காந்தியும் தேர்தலில் தோல்வியடைந்தனர்.

இந்த நிலையில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவசர நிலையின் கருப்பு நாட்களை நினைவு கூர்ந்துள்ளனர். அவசர நிலை தொடர்பான வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, எதேச்சதிகாரத்தை இந்திய மக்கள் உறுதியாக எதிர்கொண்டு வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இதேபோல் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசியலமைப்புச் சட்டத்தின் மகத்துவத்தை இந்தியர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related items

Comment

Successfully posted