ஈரானுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் கூட்டறிக்கை: சர்வதேச அரசியலில் பரபரப்பு

Jan 08, 2020 08:14 AM 672

ஈரான் நாட்டின் இராணுவத் தளபதியை அமெரிக்கா கொன்றதால் இருநாடுகள் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ஈரானுக்கு எதிராக 3 ஐரோப்பிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளதால் சர்வதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ஈராக்கின் கூட்டுப்படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ஈரான் நாட்டுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகள் தற்போது கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளன. அந்தக் கூட்டறிக்கையில், ஈராக்கில் பதற்ற நிலையை தணிக்க வேண்டிய தேவை உள்ளது, ஈராக்கில் நடைபெறும் தொடர் வன்முறைகளை நிறுத்த வேண்டும். குறிப்பாக ஈராக் மீதான ஈரானின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும்.
 
அணுசக்தி ஒப்பந்தத்துடன் பொருந்தாத அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற ஈரானை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஈராக்கில் அமைதியை நிலைநாட்டுவதில் எங்கள் பங்களிப்பை தொடர தயாராக இருக்கிறோம்.’ - என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஈரானின் இராணுவத் தளபதி சுலைமானியை அமெரிக்கா கொன்றுள்ள நிலையில், ஈரானுக்கு எதிராக வெளிவந்துள்ள இந்த ஐரோப்பிய நாடுகளின் அறிக்கை ஈரானுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்துவதாக உள்ளது - என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்
கருதுகின்றனர்.

இந்தக் கூட்டறிக்கையை அடுத்து ஈரான் அணு ஆயுத ஆய்வில் பின்வாங்கினால் அது அமெரிக்கா, ஈரான் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஈரான் அமெரிக்கா இடையே போர்ப் பதற்றம் குறைந்தால் மட்டுமே சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை, தங்கம் விலை - ஆகியவை குறையும் என்பதால் ஈரானின் அரசியல் நகர்வுகள் தற்போது சர்வதேச அளவில் பெரிதும் உற்றுநோக்கப்படுகின்றன.

Comment

Successfully posted