பாகிஸ்தான் மீது FATF அமைப்பு கடும் குற்றச்சாட்டு

Oct 09, 2019 10:23 AM 192

சர்வதேச பொருளாதார விசாரணை அமைப்பான எஃப்.ஏ.டி.எப்.(FATF), பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று கடுமையாக குற்றம்சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து விரிவான தகவல்கள்...

தீவிரவாதிகளுக்கு நிதி வழங்குவது, பொருளாதாரக் குற்றங்கள் மற்றும் பண மோசடிகள் ஆகியவற்றை விசாரிக்கும் சர்வதேச அமைப்பே எஃப்.ஏ.டி.எப்.(FATF) ஆகும்.

தீவிரவாதிகள் ஒரு நாட்டினுடைய ஆட்சியில் ஊடுறுவினால், அந்த நாட்டை கருப்புப் பட்டியலில் இவர்கள் வைப்பார்கள். அது போல தீவிரவாதிகளுக்கு உதவும் நாடுகளை இவர்கள் பழுப்புப் பட்டியலில் வைக்கிறார்கள். இந்தப் பட்டியலில் இடம்பெறும் நாடுகளுக்கு, ஐ.நா. சபையின் உதவிகளும், பிற நாடுகளின் உதவிகளும் கிடைப்பது கடினமாகிவிடும்.

இந்த எஃப்.ஏ.டி.எப். அமைப்புதான் தற்போது, ‘பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை’ - என்று பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டி உள்ளது. அதோடு, தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதை தடுக்க வேண்டும் என கடந்த
ஜூன் மாதமே தாங்கள் எச்சரித்திருந்தும், அதையும் பாகிஸ்தான் மதிக்கவில்லை என்றும் இந்த அமைப்பு கூறி உள்ளது.

மேலும், தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அளித்த 40 தீர்மானங்களில், 36 தீர்மானங்களை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை என்றும், பயங்கரவாதத்தை அகற்றுவதாக ஐ.நா. அவையில் குறிப்பிட்ட 4 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்குக் கூட பாகிஸ்தான் முயற்சிக்கவில்லை என்றும் அந்த அமைப்பு கடுமையாகக் குற்றம்சாட்டி உள்ளது.

எஃப்.ஏ.டி.எப். அமைப்பு, பாகிஸ்தானை தற்போது பழுப்புப் பட்டியலில் வைத்துள்ளது. அதில் இருந்து தங்களை நீக்கும்படி பாகிஸ்தான் தொடர்ந்து கேட்டு வருகின்றது. பழுப்புப் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்குவதா? வேண்டாமா? - என்பது குறித்த முடிவு, வரும் அக்டோபர் 13 முதல் 18ந் தேதி வரை பாரீசில் நடைபெற உள்ள எஃப்.ஏ.டி.எப். அமைப்பின் சந்திப்பில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், எஃப்.ஏ.டி.எப். அமைப்பு, பாகிஸ்தானை இப்படி விமர்சித்து உள்ளதால், பழுப்புப் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகின்றது. ஏற்கனவே, கடும் பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பழுப்புப் பட்டியலினால் பொருளாதார உதவிகள் கிடைப்பதில் கெடுபிடிகள் தொடர்ந்தால், அது பாகிஸ்தானை இன்னும் அதிகமாக
பாதிக்கும்.

Comment

Successfully posted