விவசாயிகளின் போராட்டமும், அரசின் அறிவிப்பும்-"ரத்தாகும் 3 புதிய வேளாண் சட்டங்கள்"

Nov 19, 2021 09:14 PM 1880

3 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவிப்பிற்கு பின்னர் இருக்கும் விவசாயிகளின் போராட்டங்கள் கடந்து வந்த பாதைகளை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

 

கடந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி நாடாளுமன்றத்தில் 3 வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இவற்றை எதிர்த்து நவம்பர் 26-ல் டெல்லி சலோ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவுகளும், குரல்களும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதே ஆண்டு டிசம்பர் 21-ல் விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

நடப்பாண்டு குடியரசு தினத்தன்று, டெல்லி செங்கோட்டையை நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்திய போது, வெடித்த வன்முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, டெல்லியைச் சுற்றி 6 அடுக்கு பாதுகாப்புடன் முள்கம்பிகளால் வேலிகள் அமைத்து விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒருபுறம் போராட்டம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று கொண்டிருக்க, மறுபுறம் மத்திய அரசு விவசாயிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது.

இதனிடையே உத்திரபிரதேசத்தில் பேரணி ஒன்றில், பாஜக அமைச்சர் மகனின் கார் விவசாயிகளின் மீது ஏறியதில் 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் திருத்தச் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இச்சட்டங்கள் அதிகாரபூர்வமாக திரும்பப் பெறப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். நூற்றுக்கணக்கான உயிர்கள், 14 மாத எதிர்ப்பு ஆகியவற்றோடு முடிவுக்கு வந்துள்ளது விவசாயிகளின் போராட்டம்..

 

Comment

Successfully posted