மாற்றுத்திறனாளி பெண்ணுடன் உல்லாசம் ; 50 வயதில் தந்தையான கூலித்தொழிலாளி!

Jun 28, 2020 10:15 PM 917

நாட்றம்பள்ளி அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, ஏமாற்றிய கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். முறை தவறிய உறவால் இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை ஆதரவின்றி அரசு காப்பகத்தில் தவித்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொண்டா கிந்தனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வசந்தி. மாற்றுத் திறனாளி இவர், மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கும், கொத்தூர் பகுதியை சேர்ந்த உறவினர் ஆனந்தன் என்பவருக்கும் மாடு மேய்க்க செல்லும் போது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 50 வயதாகும் ஆனந்தனுக்கு பேரக் குழந்தைகள் உள்ளனர். காலப்போக்கில் மிகவும் நெருங்கி பழகி வந்த ஆனந்தனும், வசந்தியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் வசந்தி கர்ப்பம் அடைந்த நிலையில், அவருடன் பழகுவதை நிறுத்தியுள்ளார் ஆனந்தன்.

எனினும் கருவை கலைக்க மனமில்லாத வசந்தி ஆனந்தனின் வாரிசை வயிற்றில் சுமந்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியான வசந்தி பிரசவத்துக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்சில் தாயும், சேயும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், குழந்தை தம்மிடம் இருந்தால் அதைக் கொன்று விடுவேன் என ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் வசந்தி தெரிவித்ததால், அதிர்ச்சியடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மீண்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலேயே குழந்தையுடன் வசந்தியை விட்டுச் சென்றார்.

இந்நிலையில் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு, வசந்தி அங்கிருந்து தப்பினார். பல்வேறு இடங்களில் விசாரித்தும் வசந்தி குறித்து தகவல் கிடைக்காததால், அரசு காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வசந்தியை சுற்றி வளைத்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் ஆனந்தனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 50 வயதில் தாம் செய்த தவறு வெளியே தெரிந்தால் அவமானமாக இருக்கும் என்பதால், வசந்தியை விட்டு விலகியதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆனந்தனை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். அற்ப ஆசைக்காக இருவர் செய்த தவறால், ஒன்றுமே அறியாத பச்சிளம் குழந்தை காப்பகத்தில் நிர்க்கதியாக இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted