பொது இடங்களில் கட்டணமில்லா வைஃபை!

Dec 10, 2020 06:50 AM 1281

நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை இணைய வசதியை இலவசமாக வழங்குவதற்கான திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கட்டணமில்லாமல், பொதுத் தரவு அலுவலகங்கள் மூலம் பொது வைஃபை இணைய வசதியை வழங்க நெட்வொர்க்குகள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பொது வைஃபை அணுகல் நெட்வொர்க் PM - WANI என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொது வைஃபை நெட்வொர்க்குகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், இத்திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துகிறது. கட்டணமில்லா இணைய வசதியை ஏற்படுத்தித் தரும் இத்திட்டத்திற்காக, பொதுத் தரவு மையங்கள் திறக்கப்பட உள்ளன. இணைய வசதியை பயன்படுத்த உரிமம், கட்டணம், அல்லது பதிவு எதுவும் தேவைப்படாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதே போன்று, கொச்சியில் இருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் ஆப்டிகல் பைபர் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் லட்சத்தீவில் உள்ள 11 தீவுகளுக்கு நேரடி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்கப்படும்.

இது மட்டுமல்லாமல், தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தை நடப்பு நிதியாண்டில் ஆயிரத்து 584 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதே திட்டத்தை 2020 - 2023 ஆண்டு வரை, 22 ஆயிரத்து 810 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 58 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

Comment

Successfully posted