இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு!

Jul 08, 2020 07:44 PM 554

மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில், வாடகை வீடுகள் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று தெரிவித்தார். ஏழை, எளிய மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா யோஜனா திட்டத்தின் கீழ் நவம்பர் வரை மேலும் ஐந்து மாதங்களுக்கு உணவு தாணியங்கள் இலவசமாக வழங்கப்படுவது நீட்டிக்கபடுவதாகவும் தெரிவித்தார். இதே போல், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா / ஆத்மனிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மேலும் 3 மாதங்களுக்கு தொழிலாளர் பங்காக 12 சதவீதமும், நிறுவனத்தின் பங்காக 12 சதவீத இபிஎஃப் பங்களிப்பை மத்திய அரசே செலுத்தும் என்று தெரிவித்தார். இதன் மூலம் 72 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன் பெறுவார்கள் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இலவச எரிவாயு சிலிண்டர் வழங்குவது செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாகவும், இதன் மூலம் 7.4 கோடி ஏழை பெண்கள் பயனடைவர் என்றும், இத்திட்டத்துக்காக மத்திய அரசு 13,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted