ஆற்றல் நிறைந்தவர்கள் - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று!

Dec 03, 2020 08:14 AM 2131

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவர்கள் நிகழ்த்திவரும் சாதனைகள் குறித்த செய்தித் தொகுப்பு.

ஒவ்வொரு வருடமும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் நலன்களையும் பேணிக் காத்திடும் வகையில் உலகம் முழுவதும் டிசம்பர் 3, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் தொகையில் 15 சதவீதம் மக்கள், அதாவது ஏறத்தாழ 1 பில்லியன் மக்கள் மாற்றுத்திறனாளிகளாக இருப்பதாக உலக சுகாதார நிறுவன ஆய்வின் கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், மாற்றுத் திறனாளிகளுக்கு தானியங்கி மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் சக்கர நாற்காலிகள், இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்கள், பேருந்துப் பயணச் சலுகை, குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு, மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற, பல்வேறு அரசுத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் ஆசிரியர் விஜயகுமார்...

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும், சமுதாயத்தில் சம உரிமையுடன் வாழ்ந்திடவும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பிற சேவைகள் குறித்து கூறுகிறார் மாற்றுத் திறனாளி நல ஆணையர் ஜானி டாம் வர்கீஸ்......

கடந்த 2019ஆம் ஆண்டுக்கான இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் பார்வைத் திறன் குறைபாடுடைய மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வி பூரண சுந்தரி மற்றும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த பால நாகேந்திரன் ஆகியோர் தேர்ச்சி பெற்று அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்தனர். இந்நிலையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவர்களை வரவழைத்து நினைவுப் பரிசு வழங்கி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டுத் துறையிலும் சாதித்து வருகின்றனர் மாற்றுத்திறனாளிகள். தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன் தங்கவேலு 2016 ம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடந்த மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றதை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

தன்னம்பிக்கையுடன் முன்னேற்றப் பாதையில் வலம் வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

 

Comment

Successfully posted