8 வழிச்சாலைத் திட்ட ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்- தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Oct 30, 2018 09:42 AM 656

சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைத் திட்ட ஒப்பந்தப்புள்ளி தொடர்பான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யுமாறு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை-சேலம் இடையேயான பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து நில உரிமையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த திட்டத்துக்கு, தனியார் நிறுவனங்களிடம் இருந்து பணி ஒப்பந்தப் புள்ளி விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கூறப்பட்டது.

இப்பணிக்கு 12 ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டதாகவும் அதில் ஹரியானாவைச் சேர்ந்த ஃபீட்பேக் இன்ஃப்ரா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஒப்பந்தப் புள்ளிகள் தொடர்பான விவரங்கள் மற்றும் பிற ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை இன்றும் நடக்கிறது.

Comment

Successfully posted