"கோலிவுட்டின் இசை மின்னல்" - ஹாரிஸ் ஜெயராஜ் 47வது பிறந்த தினம்

Jan 08, 2022 08:35 PM 2929

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஹாரிஸ் ஜெயராஜின் 47வது பிறந்த தினம் இன்று. மின்னலே முதல் காப்பான் வரை, அவர் ரசிகர்களை வசீகரித்ததன் பின்னணியை தற்போது பார்க்கலாம்.


மெல்லிசை மன்னர்கள், இசைஞானி, இசைப்புயல் என இவர்களால் தன்னிறைவுப் பெற்ற தமிழ்த் திரையுலகில், இசை மின்னலாக வந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். 1975ம் ஆண்டு பிறந்த அவர், இசையின் நுணுக்கங்களை நிறைவாக நுகர்ந்தவராக, 2001ம் ஆண்டு வெளியான ‘மின்னலே’ படம் மூலம், திரையுலகில் நுழைந்தார்.


துல்லியமான இசைநுட்பம், வசீகரமான பாடல் வரிகள், புதுமையான வார்த்தைகள், ஆர்ப்பாட்டமில்லாத மெலடிகள் என அறிமுகமான குறுகிய நாட்களிலேயே, பெரும் ரசிகர்கள் பட்டாளத்தின் இசைத் தளபதியாக தன்னை மெறுகேற்றிக் கொண்டார்.

ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் விந்தைகளை, அவரின் கித்தார் கம்பிகள் கூட அறிந்திருந்தது. அதனால் தான் ஹாரிஸ் ஜெயராஜின் பாடலின் தொடக்கத்திலும், இடையிலும் வெண்பனியாக ஒலிக்கும் கிதார் கம்பிகளின் இசைக் கற்றைகள், பலரின் அதிகாலை தூக்கத்தை கூட துயில் எழுப்பும் அலாரமாக மாறியது.

பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் அவரது நுணுக்கங்கள், காலைத் தென்றலின் அமைதியையும், பேரருவியின் பெரும் பாய்ச்சலையும் திரையில் நிகழ்த்திக் காட்டியது.

பெளர்ணமி இரவில், பாய்மரப் படகில், ஒற்றை ஆளாய் பெருங்கடலில் சுழன்றுக் கொண்டிருப்பவனின் வெறுமையை கொன்று புதைக்கும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள், பலருக்கும் மாமருந்து என்றால் அது மிகையாகாது.இசைக்கு துயரில்லை என்பதைப் போல, ஹாரிஸின் இசை பலரின் துயரங்களைத் துடைக்காமல் கரையைக் கடந்ததில்லை.

இசை ரசிகர்களின் இரண்டாம் உலகம், எல்லைகள் இல்லா இசை காப்பான் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி மகிழ்கிறது நியூஸ் ஜெ.

Comment

Successfully posted