வாகனங்களில் ஒட்டியுள்ள தலைவர்கள் படங்களை நீக்க வேண்டும்

Sep 10, 2021 01:30 PM 1202

வாகனங்களின் வெளிப்புறத்தில் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை 60 நாட்களில் நீக்க வேண்டும் என காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

2019 விதிகளின்படி பார் கவுன்சில் அனுமதி வழங்கிய ஸ்டிக்கர்களை வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அனுமதி இல்லாமல் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை சட்டக்கல்லூரி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.  

இந்த மனு ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் மற்றும் நீதிபதி புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், விதிமுறைகளை பின்பற்றி ஆண்டுத்தோறும் உரிமம் புதுப்பித்தல், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள முகப்பு விளக்கு முறையாக பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். 

வாகனத்தின் தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் அல்லது நிறம் ஊட்டப்பட்ட கண்ணாடிகள் இருந்தால் அதனை நீக்க வேண்டும். 

வாகனத்தின் வெளிப்புறத்தில் தெரியும்படி கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை நீக்க வேண்டும். 

கட்சியின் தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் நேரங்களில் பயன்படுத்தலாமே தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

வாகனத்தின் நம்பர் போர்டுகள் மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இதனை 60 நாட்களில் நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் இதனை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் அல்லது வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Comment

Successfully posted