சூடுபிடித்தது ஊரக உள்ளாட்சித் தேர்தல் களம்

Sep 20, 2021 09:58 AM 2760

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், வேட்பு மனுத் தாக்கல் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வேட்பு மனுத் தாக்கல் வருகிற 22ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது. இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்தலில், இதுவரை 20 ஆயிரத்து 74 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 16 ஆயிரத்து 420 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 3 ஆயிரத்து 243 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 385 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 26 பேரும், இதுவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வார்டு உறுப்பினர் பதவி முதல் ஊராட்சி மன்ற தலைவர் பதவி வரை ஆளும் கட்சியினர் ஏலம் விட்டு வருவதாக புகார்கள் குவிகின்றன. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, பொன்னங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதுராதுத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள், 13 லட்சத்திற்கு ஏலம் விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம்  மூங்கில்துறைப்பட்டு சோதனை சாவடியில் நடைபெற்ற வாகன சோதனையில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முருகன் என்பவரிடமிருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 720 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். 

வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆனால் தேர்தல் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக தேர்தல் ஆணையம் இன்னும் மெத்தனத்துடன் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் இன்னும் தீவிரப்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Comment

Successfully posted