மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு

Jul 31, 2021 03:57 PM 3188

மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

மேற்கு வங்கத்தில் பங்குரா, ஹுக்ளி, பிரபம், வடக்கு மற்றும் தெற்கு பர்கானஸ், மேற்கு மிட்னாபூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது.

அசன்சோல் மாவட்டத்தில் தாமோதர் மற்றும் அஜய் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால், பல கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தாழ்வான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், மழைநீர் சூழ்ந்த வீடுகளில் இருந்து அனைத்து பொருட்களையும் இழந்த மக்கள், செய்வதறியாமல் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

ஹுக்ளி மாவட்டத்தில் தாரகேஷ்வர், முண்டேஸ்வரி, ஜாலாங்கி, சரஸ்வதி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், ஆற்றின் கரையோரமாக உள்ள வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

துர்காபூரில் மேம்பாலத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

மேற்கு வங்கம் - சிக்கிம் தேசிய நெஞ்சாலையில் கலிம்போங் என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதையுண்டன.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் முன்கூட்டியே மீட்கப்பட்ட நிலையில், மண்ணில் புதைந்து யாரேனும் உயிரிழந்தார்களா? என்பதை மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, மேற்கு வங்கத்தில் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பல்லாயிரம் பேர் வீடுகளை இழந்து 300க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு கூறியுள்ளது. 

image

ஹரியானா மாநிலத்தில் ஹிசர், ஃப்தேஹாபாத், ஜிந்த், கர்னல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அரியானாவில் உள்ள ஹத்னிக்குண்ட் அணையில் இருந்து யமுனா ஆற்றில் அதிகளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் நுரைபொங்கியபடி ஆற்றில் பாய்ந்து செல்கிறது.

யமுனை ஆற்றில் கரைபுரண்டும் வெள்ளத்தால், கர்னல் மாவட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

மேலும், சாலைகள் மழைநீர் சூழ்ந்து காணப்படுவதால், பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பால், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், மழைநீர் சூழ்ந்த வீடுகளுக்குள் மக்கள் முடங்கியுள்ளனர்.

இதனிடையே, மேற்கு வங்கம், அரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள சில இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

 

Comment

Successfully posted