தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Jun 18, 2021 05:59 PM 1126

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்க தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 2 கோடிக்கும் மேலான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, கொரோனா நிவாரண நிதி 4ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், அரிசி அட்டை வைத்திருக்கும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு நிவாரண நிதி வழங்க தடை விதிக்கக் கோரி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், மத்திய, மாநில அரசுத் துறைகளிலும், அரசு நிறுவனங்களிலும் பணியாற்றுபவர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும், கொரோனா ஊரடங்கிலும் சம்பளக் குறைப்பின்றி முழு சம்பளம் வழங்கப்படுவதால், அவர்களுக்கு வருமான இழப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஊரடங்கு கட்டுப்பாட்டால் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதல் நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆர்.சுப்பையா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Comment

Successfully posted