ஐபிஎல் கிரிக்கெட்: சென்னையை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற பஞ்சாப்

May 05, 2019 10:25 PM 493

ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது.

இறுதி கட்டத்தை எட்டி வரும் ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது. மொஹாலியில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கிடையேயான கடைசி லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப், சென்னை அணியை பேட் செய்ய பணித்தது.

அதன்படி பேடிங்கை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் 7 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்சியளித்தார். இதனையடுத்து பாப் டு பிளிஸ்சும், சுரேஷ் ரெய்னாவும் இணைந்து பஞ்சாப்பின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். 2-வது விக்கெட்டுக்கு 120 ரன்கள் குவித்த நிலையில், அதிரடியாக ஆடிய ரெய்னா 53 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு முனையில் சதத்தை நெருங்கி கொண்டிருந்த பிளிஸ்சிஸ், 56 பந்துகளில் 96 ரன்கள் குவித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய சென்னை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், 20 ஓவர் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி தரப்பில் சாம் குர்ரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 171 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுலும், கிறிஸ் கெயிலும் அதிரடியாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தனர். கெயில் 28 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய ராகுல் 36 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய வீரர்களின் கணிசமான பங்களிப்பால், 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப், 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 71 ரன்கள் குவித்த கே.எல்.ராகுல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஆறுதல் வெற்றியுடன் போட்டியிலிருந்து வெளியேறியது.

Comment

Successfully posted