அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு

Nov 09, 2019 07:06 AM 495

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்திற்கு உரிமை கோரி ராம்லல்லா, நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று அமைப்புகளும் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில் 40 நாட்கள் தொடர் விசாரணை நடத்தி வந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அப்துல் நசீர், அசோக் பூஷண் மற்றும் சந்திராசூட் ஆகியோர் தீர்ப்பு விவரத்தை வெளியிட இருப்பதாக உச்சநீதிமன்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு அறிவிப்பை அடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அயோத்தி நகரம் அமைந்துள்ள கோரக்பூர் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அயோத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தி சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் வரலாறு காணாத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு நிலவரம் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் பதற்றமாக கருதப்படும் மாவட்டங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்படுத்தவும் அவர் உத்தரவிட்டார்.

மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா உட்பட நாட்டின் மற்ற மாநிலங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் விடிய விடிய தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். பயணிகள் அனைவரும் தீவிர கண்காணிப்பிற்கு பிறகே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சென்னை மாநகர் முழுவதும் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அயோத்தி வழக்கில்  இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

Comment

Successfully posted