தமிழகத்தில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

Apr 02, 2021 04:13 PM 732

திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீடு உட்பட தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்லுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் வாக்காளர்களுக்கு அளிக்க பல இடங்களில் பணம் பதுக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து வருமான வரித்துறையினரும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் இன்று 15 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் இன்று காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இருந்து செயல்பட்டு வரும் ஐ-பேக் நிறுவத்திலும், சபரீசன் நண்பர் ஜீ ஸ்கொயர் பாலா இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. அதேபோல சென்னை அண்ணாநகரில் இருக்கும் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணை செயலாளர் கார்த்தி மோகன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கரூரில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் தி.மு.க. எம்.பி.யும், கலசப்பாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளருமான சி.என். அண்ணாதுரை வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. தென்றல் நகரில் உள்ள அவரின் வீடு மற்றும் தேவனம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அவரின் பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்ட சோதனையில் 3 கோடி 50 லட்சம் ரூபாயை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீடு உள்பட பல்வேறு இடங்களில் வருமானவரிதுறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் தி.மு.க. எம்.பி. அண்ணாதுரை வீட்டில் ஐ.டி. ரெய்டுஅண்ணாதுரையின் வீடு மற்றும் பண்ணை வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது

Comment

Successfully posted