சதமடித்த மயங்க் அகர்வால், அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி

Dec 04, 2021 07:59 AM 25624

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்தியா, 4 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை சேர்த்துள்ளது. மயங்க் அகர்வால் அபாராமாக விளையாடி சதமடித்தார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்தநிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 44 ரன்கள் எடுத்திருந்த போது சுப்மன் கில், அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கோலி, அதே ஓவரின் கடைசி பந்தில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 196 பந்தில் தனது 4வது டெஸ்ட் சதத்தை அடித்தார்.

இரண்டாவது டெஸ்ட போட்டி தாமதமாக தொடங்கியதால் முதல் நாளில் நிர்ணயிக்கப்பட்ட 70 ஓவர் முடிவில், இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்களை எடுத்துள்ளது. அகர்வால் 102 ரன்களிலும், சாஹா 20 ரங்களிலும் களத்தில் உள்ளனர்.

இந்திய அணியின் மூன்று விக்கெட்டுகளை நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் வீழ்த்தினார்.

 

Comment

Successfully posted