மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி: உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு

Nov 10, 2018 09:20 AM 245

சென்னையில் நடைபெறும் இந்தியா மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் கடைசி 20 ஓவர் போட்டியையொட்டி இந்திய வீரர்கள் இன்று சென்னை வரவுள்ளனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-க்கு 1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

இந்நிலையில், இவ்விரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரைக் கைப்பற்றிய நிலையில், 3-வது 20 ஓவர் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.

இப்போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. உமேஷ் யாதவ், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர், சபாஸ் நதீம் மற்றும் சித்தார்த் கவுல் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்துக்காக தங்கள் சொந்த ஊருக்கு சென்ற இந்திய வீரர்கள், கடைசி 20 ஓவர் போட்டியில் பங்கேற்க இன்று சென்னை வர உள்ளதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Comment

Successfully posted