
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
கடந்த 1983ம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் உலக கோப்பையை வென்றதன் 37வது ஆண்டு கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 1983ம் ஆண்டு 3வது உலக கோப்பை தொடரை இதே நாளில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றி சாத்தியமானது. அதன் பிறகு 2011ல் தோனி தலைமையிலான இந்திய அணி, 28 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது உலக கோப்பையை கைப்பற்றியபோதிலும், கபில் தேவ் தலைமையிலான இந்த முதல் வெற்றி எப்போதுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
1983ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் சந்தித்தன. இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபிக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அதற்கு ஏற்ப முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் 38 ரன்கள் எடுத்தார். வெற்றி இலக்கு ரன் குறைவு என்பதால் முதல் பாதி ஆட்டம் முடிந்ததுமே மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் மகிழ்ச்சியில் திளைக்க தொடங்கினர். ஆனால் கேப்டன் கபில்தேவ் இன்னிங்ஸ் இடைவெளியின் போது இந்திய வீரர்களுக்கு ஊக்கம் அளித்தார். ‘நாம் வெற்றி பெறக்கூடிய அளவுக்கு ரன் எடுக்காவிட்டாலும், போராட்டம் அளிக்கக்கூடிய அளவுக்கு ரன் எடுத்து இருக்கிறோம். லீக் ஆட்டத்தில் நாம் மேற்கிந்தியத் தீவுகள் அணியை விழ்த்தி இருக்கிறோம். அந்த நம்பிக்கையுடன் கடைசி வரை துணிச்சலுடன் போராடினால் வெல்லலாம்’ என்று கூறி நம்பிக்கை அளித்தார். நமது வீரர்களின் துணிச்சலான போராட்டத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 52 ஓவர்களில் 140 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக உலக கோப்பையை தன்வசமாக்கியது. அத்துடன் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஹாட்ரிக் கோப்பை கனவை கலைத்ததுடன், அந்த அணியின் ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அணி தரப்பில் மொகிந்தர் சிங் அமர்நாத், மதன்லால் தலா 3 விக்கெட்டுகளையும், பல்விந்தர் சந்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் பால்கனியில் கோப்பையுடன் கபில்தேவ் தோன்றிய அந்த காட்சி இன்றுவரை அனைவருக்கும் பிடித்தமானதாக உள்ளது. இந்த போட்டியில் 26 ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய மொஹிந்தர் அமர்நாத்துக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.
உலக கோப்பை வெற்றியை கோடிக்கணக்கான இந்திய ரசிகர்கள் உற்காசமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். இந்த வெற்றி, இந்தியாவில் கிரிக்கெட் ஆட்டம் விசுவரூப வளர்ச்சி காண்பதற்கும், அதிக அளவில் ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்கும் வித்திட்டது என்றால் மிகையாகாது. இந்த வெற்றியின் 37வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி இந்திய வீரர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். சுரேஷ் ரெய்னா, முகமது கையிப், ஹர்பஜன் சிங் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Successfully posted