பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற இந்தியர் - சிறப்பு தொகுப்பு

Oct 17, 2019 12:46 PM 205

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி மற்றும் அவரின் மனைவி எஸ்தர் டஃப்லோ ஆகியோருக்குத் தமிழகத்துடனும், தமிழக அரசுடனும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் விரிவான செய்தித் தொகுப்பு


உலகின் மிகச் சிறந்தவர்களின் சிந்தனைகளைச் செயலாக்கிய மாநிலம் - என்ற பெருமை தமிழகத்திற்கு எப்போதும் உண்டு. அப்படியாகத் தமிழகத்திற்குத் தங்கள் உழைப்பை வழங்கிவரும் இருவர்தான் தற்போது நோபல் பரிசு வென்றுள்ள அபிஜித் பானர்ஜி மற்றும் அவரின் மனைவி எஸ்தர் டஃப்லோ ஆகியோர்.

இவர்கள், அப்துல் லத்தீப் ஜமீல் பாவெர்டி ஆக்சன் லேப் - என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த உலகளாவிய அமைப்பானது ஏழ்மையை ஒழிப்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில், தமிழக அரசின் சார்பில், கடந்த 2014ஆம் ஆண்டே இந்த அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அப்போது, எஸ்தர் டஃப்லோ தானே சென்னைக்கு வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

தமிழகத்தில் உள்ள ஏழ்மை ஒழிப்புத் திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்கள் ஆகியவை சிறப்பான பலன்களைக் கொடுக்கின்றதா? - என்று ஆய்வு செய்யும் பணியை அப்துல் லத்தீப் ஜமீல் பாவெர்டி ஆக்சன் லேப் தொடங்கியது. பின்னர் இன்றுவரை, தமிழக அரசின் வறுமை ஒழிப்புத் திட்டங்களிலும் மக்கள் நலத் திட்டங்களிலும் அரசிற்குத் துணைபுரிந்து வருகின்றது.

தமிழக அரசின் நல்வாழ்வுத்துறை, கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் நலத்துறை, வீட்டுவசதித் துறை, ஊரகவளர்ச்சித்துறை, சமூகநலத் துறை, சத்துணவுத்துறை, வரிவிதிப்புத் துறை உள்ளிட்ட துறைகளுடன் அப்துல் லத்தீப் ஜமீல் பாவெர்டி ஆக்சன் லேப் இணைந்து செயலாற்றி வருகிறது. இதற்காக ரூ.23 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு இந்த அமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் பல முக்கிய முடிவுகளில் இந்த அமைப்பு தமிழக அரசுக்கு உறுதுணையாக இருந்துள்ளது. நோபல் பரிசுக் குழு இந்த ஆற்றல் மிக்கவர்களைக் கண்டுபிடிப்பதற்கு 5 ஆண்டுகள் முன்பே இவர்களைக் கண்டுபிடித்து, அவர்களின் ஆற்றலைத் தமிழக மக்களின் மேம்பாட்டிற்குப் பயன்படுத்தி வருகின்றது நமது தமிழக அரசு. இது ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டிய செய்தி!.

Comment

Successfully posted