இந்தியன்-2 தான் எனது திரையுலக பயணத்தின் கடைசி படம் - கமல் அறிவிப்பு

Dec 04, 2018 06:36 PM 243

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தோடு, தனது ஐம்பது ஆண்டுகளைக் கடந்த திரையுலகப் பயணத்தை முடித்துக்கொள்வதாக, கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி, தனது 50 ஆண்டு திரையுலக பயணத்தில், பல்வேறு மொழிகளில் கமல்ஹாசன் வெற்றிகரமான நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு, திடீரென்று அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்த அவர், கடந்த பிப்ரவரி மாதம், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். அதைத் தொடர்ந்து, தற்போது மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணமும் செய்து வருகிறார். பல மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனைகளிலும் ஈடுபட்டு வருகிறார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் "இந்தியன்" படத்தின் இரண்டாம் பாகத்தோடு, தனது திரையுலகப் பயணத்தை முடித்துக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசன் இதை அறிவித்திருந்த போதிலும், சமீபத்தில் "தேவர் மகன்" படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவது பற்றி பேசி வந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், திடீரென்று தற்போது, அவர் முன்பு கூறியது போலவே, "இந்தியன்" படத்தின் இரண்டாம் பாகத்தோடு, தனது 50 ஆண்டுகளுக்கும் மேலான திரையுலகப் பயணத்தை முடித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இது, உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted