இந்திய மற்றும் சீன தூதரக அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை!

Jul 09, 2020 09:38 PM 545

எல்லை பிரச்னையை தீர்ப்பதற்கான முயற்சி மேம்பட்டுள்ளதாகவும், இந்தியாவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக்கில் ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே, தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இருதரப்பு ராணுவ கமாண்டர்கள் தரப்பிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு, கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஒருசில இடங்களில் இருந்து இந்திய மற்றும் சீன படைகள் பின்வாங்கியுள்ளன. இந்நிலையில் எல்லை பிரச்னையை தீர்ப்பதற்கான சமரச முயற்சி மேம்பட்டுள்ளதாகவும், இருதரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் இந்திய மற்றும் சீன தூதரக அதிகாரிகள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண இருநாடுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு நாளை கூடுகிறது. தற்போது கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து சீன படைகள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted