பெண்கள்,குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் தினம்!

Feb 11, 2021 07:02 AM 6983

உங்களுக்கு தெரிந்த சில விஞ்ஞானிகளின் பெயர்களை சொல்லச் சொன்னால், வரிசையாக சொல்வீர்கள். ஆனால் பெரும்பாலானோர் குறிப்பிடுவது ஆண் விஞ்ஞானிகளின் பெயரைத் தான். உலகம் முழுவதும் பெண் விஞ்ஞானிகள் புரிந்த சாதனையும் எண்ணிலடங்காதது. நோபல் பரிசை வென்றது முதல் நாசாவிற்கு செல்வது வரையிலும் வரலாற்றில் தங்களது பெயர்களை இடம்பெறச் செய்துள்ளனர், பல பெண் விஞ்ஞானிகள்.

நோபல் பரிசு பெற்ற முதல் அறிவியல் மங்கை மேரி கியூரி. கதிரியக்கம் தொடர்பான அவரது கண்டுபிடிப்புகள் சர்வதேச அளவில் அவரை பிரபலமாக்கியது. இயற்பியல் மற்றும் வேதியியல் என இருவேறு துறைகளுக்காக நோபல் பரிசை பெற்ற முதல் விஞ்ஞானி மேரி கியூரி. இவரைத் தொடர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் பெண் அறிவியல் அதிகாரியான பெக்கி விட்சன், 1953ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடலின் அடித்தளத்தின் வரைபடத்தை உருவாக்கிய முதல் பெண் விஞ்ஞானி மேரி தர்ப், எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தடுப்பில் திருப்புமுனை ஏற்படுத்திய குவாரிஷா அப்துல் கரீம், 2008ஆம் ஆண்டில் தென் கொரியாவின் முதல் விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்ற சோயோன் யீ, இப்படி உலகளவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளார் இந்தியாவின் முதல் தலைமுறை பெண் விஞ்ஞானிகளில் ஒருவரும், தாவரவியல் தாரகை என்றும் போற்றப்படும், கேரளத்தைச் சேர்ந்த ஜானகி அம்மாள். மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள், பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்த ஜானகி அம்மாள், 1957-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

அடுத்து, இந்தியா தந்த முனைவர் ஆசிமா சாட்டர்ஜி, புற்றுநோய் எதிர்ப்பு குணம் கொண்ட நித்தியகல்யாணி தாவரத்தில் உள்ள வின்கா ஆல்கலாய்டு தொடர்பாக ஆராய்ந்தவர்.

வானிலைத் துறையிலும் சாதித்த இந்தியாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி தான் அன்னா மணி. சர் சி.வி. ராமனுடைய இயற்பியல் மாணவிகளில் ஒருவரான இவர், சூரியக் கதிரியக்கம், பாதகமான கதிரியக்கத்தைத் தடுக்கும் ஓசோன் படலம், காற்று ஆற்றல் ஆகியவற்றை அளப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

நுண்ணலை ஆராய்ச்சியையும் விட்டு வைக்கவில்லை நமது நாட்டு பெண் விஞ்ஞானி. கர்நாடகத்தின் முதல் பெண் பொறியாளரான ராஜேஸ்வரி சாட்டர்ஜி, நுண்ணலை ஆராய்ச்சி ஆய்வகத்தை அமைத்து, நுண்ணலை பொறியியல் துறை சார்ந்து முன்னோடி ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

இப்படி, பெண் விஞ்ஞானிகள் அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கி வருவது குறித்து குழந்தைகளுக்கு நாம் எடுத்துரைக்கலாமே...? பெற்றோர் குழந்தைகளை ஊக்குவித்தால், வருங்காலங்களில், இந்திய பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கையை நாம் அதிகரிக்கலாம்...!

Comment

Successfully posted