உலகின் அதிவேக மின்சார விமானம் அறிமுகம்

Jan 13, 2020 08:55 PM 648

உலகின் அதிவேக மின்சார விமானத்தை ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது. அதன் சிறப்புகள் என்னென்ன?

டீசல், பெட்ரோல் வாகனங்களால் ஏற்படும் மாசு மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களே எதிர்காலம் என்று ஆகிவிட்டது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன. மின்சார பைக்குகள், மின்சார கார்கள் வரிசையில் மின்சார விமானங்கள் கடந்த ஆண்டு முதல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் தனது புதிய மின்சார விமானத்தை அறிமுகம் செய்து சந்தையை அதிர வைத்துள்ளது பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமும் விமான எஞ்சின்கள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமுமான ரோல்ஸ் ராய்ஸ். ஆக்செல் (ACCEL) - என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த மின்சார விமானத்தில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய முடியும். 250 வீடுகளுக்கு மின்வசதி கொடுக்கும் அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளதால், ஒருமுறை முழுவதும் மின்சாரம் ஏற்றப்பட்டால் 321 கிலோ மீட்டர்கள் தூரத்தை இந்த விமானத்தால் கடக்க முடியும். இந்த விமானத்தில் மூன்று எடை குறைவான மின்சார மோட்டார்கள் உள்ளன. இவற்றின் மூலம் மணிக்கு 480 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். இதுவே மின்சார விமானத்தின் மிக அதிக வேகமாக உள்ளது.
 
இந்த விமானத்தை இங்கிலாந்து அரசாங்கத்தின் நிதி உதவியோடும், யாசா (YASA), எலக்ட்ரோ பிளைட் (Electroflight) - ஆகிய விமானத் தயாரிப்பு நிறுவனங்களின் ஆலோசனைகளோடும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இது மிகவும் பாதுகாப்பான நம்பகத் தன்மையான மின்சார விமானமாகப் பார்க்கப்படுகின்றது. ரோல்ஸ் ராய்ஸ் போன்றே ஏர்பஸ், போயிங் போன்ற நிறுவனங்களும் மின்சார விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளன. இந்த விமானங்களும் இந்த ஆண்டுக்குள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Comment

Successfully posted