அமெரிக்கா மீது தாக்குதலைத் தொடங்கிய ஈரானின் புதிய தளபதி

Jan 22, 2020 06:48 AM 441

ஈரானின் புதிய இராணுவத் தளபதி பதவியேற்ற 6 மணி நேரத்தில், அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதால், வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த ஜனவரி 3ஆம் தேதி ஈராக்கில், அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில், அந்நாட்டு இராணுவத் தளபதியும், அரசியலில் இரண்டாவது அதிக அதிகாரங்கள் படைத்தவருமான குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளத்தின் மீது அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்கத் தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. ஆனால், ஈரானில் இருந்து உக்ரைன் சென்ற பயணிகள் விமானம் இந்தப் போரின் போது தவறுதலாகத் தாக்கப்பட்டதால் 170 பயணிகள் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தனர்.
 
இதன் பின்னர் இரண்டு நாடுகளும் தாக்குதல்களை நடத்தவில்லை. ஈரான் தரப்பில் இராணுவத் தளபதி இல்லாமல் இருந்ததும் இந்த அமைதிக்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டது. இந்நிலையில், ஈரான் படைகளின் புதிய தளபதியாக இஸ்மாயில் குவானி என்பவர் தற்போது பதவியேற்று உள்ளார். இவர் அமெரிக்காவால் கொல்லப்பட்ட சுலைமானிக்கு நெருக்கமாக இருந்தவர். இன்று இவர் பதவியேற்ற அடுத்த 6 மணி நேரத்தில் முதல் வேலையாக ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகே, ஈரான் இராணுவம் 3 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது.
 
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்மாயில் குவானி, நாங்கள் சுலைமானி கொலைக்கு பழி வாங்கியே தீருவோம் என்றும், அமெரிக்காவைப் போல மறைந்திருந்து, டிரோன் தாக்குதல் நடத்த மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். உலகில் இருக்கும் மற்ற நாடுகளின் உதவியுடன் அமெரிக்காவுக்குக் கண்டிப்பாக மிகப்பெரிய பதிலடியை கொடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இதனால் அமெரிக்கா - ஈரான் இடையே போர் தொடரும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் இதுவரை ஈரான் அமெரிக்க வீரர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படும்படியான எந்தத் தாக்குதல்களையும் நடத்தவில்லை என்பதால், அமைதி திரும்ப வாய்ப்புகள் உள்ளதாகவும் மற்றும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

Comment

Successfully posted