வெட்கமில்லையா விஜய் சேதுபதி? ட்விட்டரில் கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்

Oct 14, 2020 06:43 PM 971

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படமான 800 படத்தில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ”ஷேம் ஆன் விஜய் சேதுபதி” என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

எம்.எஸ். ஸ்ரீபதி இயக்கத்தில் விஜய் சேதுபதி முரளிதரனாக நடிக்கும் 800 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்றதுமே தமிழ் அமைப்புகளிடமிருந்தும், தமிழ் இன உணர்வாளர்களிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த உணர்வெழுச்சி இப்போது ”ஷேம் ஆன் விஜய் சேதுபதி” என்ற ஹேஷ்டேக்காக ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

முத்தையா முரளிதரன் இலங்கை குடியுரிமையோடு அந்த நாட்டு அணிக்காக விளையாடி இருந்தாலும், அவரின் பூர்வீகம் தமிழகத்தின் திருச்சி தான். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளராக இலங்கை சென்ற முரளிதரனின் தாத்தா, திருச்சிக்கே திரும்பினாலும், முரளிதரனின் தந்தை முத்தையா இலங்கையிலேயே செட்டிலாகிவிட்டார்.

அப்படி இருக்கும்போது, டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக 800 விக்கெட்களை வீழ்த்திய ஒரு சாதனைத் தமிழனைப் பற்றிய படத்தில் நடிப்பதற்காக ஏன் விஜய் சேதுபதியை எதிர்க்க வேண்டும் என கேள்வி எழலாம். இங்குதான் முக்கிய விஷயமே இருக்கிறது. போர் என்ற ஒற்றை வார்த்தையால் நம் தொப்புள் கொடி உறவுகளை கொன்றொழித்து, தமிழ் இன அழிப்புக்கு வித்திட்ட ராஜபக்சே சகோதர்களுக்கு ஆதரவளித்தவர்தான் முரளிதரன். ராஜபக்சேவை நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டது, 2009ல் இலங்கை போர் நிறுத்தம் நடந்த தினம்தான் எனக்கு மகிழ்ச்சியான நாள் என்று சொன்னது என அவரின் நிலைப்பாடு தமிழர்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறது.

அதனால், கடந்த ஆண்டு இலங்கை தேர்தல் முடிவின் போது கூட கிழக்கு மாகாண ஆளுநர் பதவி அவருக்கு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. முரளிதரனின் இந்த நிலைப்பாட்டின் காரணமாகத்தான் இலங்கை கொடி பதித்து சிங்கள வெறி ஊறிப்போன அந்த நீல நிற ஜெர்சியை அணிந்து விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என எதிர்க்கிறார்கள் மரத் தமிழர்கள்.

Comment

Successfully posted