நாட்டில் கள்ளக்காதல் அதிகரிக்க டிவி சீரியல்கள் தான் காரணமா? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

Mar 06, 2019 08:51 PM 310

நாட்டில் கள்ளக்காதல் அதிகரிக்க டிவி சீரியல்கள் தான் காரணமா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு கள்ளக்காதலால் ஏற்பட்ட பிரச்சனையில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான அஜித்குமார் என்பவர் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, வரைமுறையற்ற உறவுகள் ஆபத்தான சமூக தீங்கு என கவலை தெரிவித்தனர்.

தொடர்ந்து, நாட்டில் கள்ளக்காதல் அதிகரிப்பது குறித்தும், அது தொடர்பான குற்றங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். கள்ளக்காதல் அதிகரிக்க டிவி சீரியல்களும், திரைப்படங்களும் தான் காரணமா? கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளோர், கொலை மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடச் செய்யும் வகையில் டிவி சீரியல்கள், சினிமாக்களில் காட்சிகள் அமைக்கப்படுகின்றனவா? வாழ்க்கை துணைகளை ஒழித்து கட்ட கூலிப்படையினர் அமர்த்தப்படுகின்றனரா? பொருளாதார சுதந்திரம் காரணமாக கணவனோ, மனைவியோ திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை வைத்துக் கொள்கிறார்களா?

பாலியல் பிரச்னைகள் காரணமாக தம்பதியர் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகளை வைத்துக் கொள்கிறார்களா? என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக ஜூன் 21 ஆம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு
உத்தரவிட்டனர்.

Comment

Successfully posted

Super User

TV Serials are the reason for cultural degeneration