சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஜேபி டுமினி ஓய்வு

Jan 14, 2020 12:25 PM 741

தென்னாப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் ஆன ஜேபி டுமினி, அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டராக விளையாடியவர் ஜே.பி.டுமினி. 35 வயதான இவர், தென்னாப்பிரிக்கா அணிக்கு துணை கேப்டனாகவும் பணியாற்றி உள்ளார். இதைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இருபது ஓவர் போட்டிகளில் அதிகமாக ஆடிய டுமினி, இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடி உள்ளார். இதுவரை 46 டெஸ்ட் (2103 ரன்கள், 42 விக்கெட்), 199 ஒருநாள் (5117 ரன்கள், 69 விக்கெட்), 81 டி-20 (1934 ரன்கள், 21 விக்கெட்) போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

ஓய்வு முடிவு குறித்து டுமினி கூறுகையில், "எதிர்காலம் குறித்து கடந்த சில மாதங்களாக யோசித்து வந்ததாகவும், இது கடினமான முடிவு என்றாலும், தற்போது ஓய்வு பெறுவதே சரியா தருணம் என்று முடிவு செய்தேன். மேலும், பணம் வேண்டும் என்பதால் சிபிஎல் மற்றும் கனடா லீக்கில் பங்கேற்று உள்ளேன். இதுநாள் வரை தனக்கு ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

Comment

Successfully posted