காலமானார் காளியண்ண கவுண்டர் - கொரோனாவால் உயிர் பிரிந்தது

May 28, 2021 04:29 PM 831

 அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்த காளியண்ண கவுண்டர் உயிரிழந்தார்.

1921ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பட்டி கிராமத்தில் முத்துநல்லி கவுண்டர் - பாப்பாயம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் காளியண்ண கவுண்டர். திருச்செங்கோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிப்பை முடிந்த கையொடு சென்னை லயோலா கல்லூரியில் பிஏ பட்டம் முடித்தார். கல்லூரிக்காலங்களிலேயே அவருக்குள் விடுதலைக்கான தனல் எரிந்துகொண்டிருந்தது. அப்போது நாடெங்கும் பற்றி எரிந்துகொண்டிருந்த விடுதலை போராட்டத்தில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டார் காளியண்ண கவுண்டர். இதனையறிந்த கல்லூரி நிர்வாகம் அவர் படிப்பை தொடர அனுமதிக்கவில்லை.

விடுதலை வேட்கைக்காக தனது படிப்பை தியாகம் செய்தார். முற்றிலுமாக அதை முறித்துவிட்டார் என்று சொல்லமுடியாது. காரணம், பச்சையப்பன் கல்லூரி அவரை அரவணைத்தது. அக்கல்லூரியில் எம்.ஏ பட்டம் பெற்ற அவர், தனது 27வது வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.திருச்செங்கோட்டைச் சேர்ந்த இவர் எம்.பி, எம்.எல்.ஏ, எம்.எல்.சி ஆகிய பதவிகளையும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் அமைச்சருக்கு நிகரான ஜில்லாபோர்டு தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்தவர். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

Comment

Successfully posted