ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குகிறார் கமலாதேவி ஹாரிஸ்!

Aug 12, 2020 10:05 PM 2877

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பல்வேறு உயர் பதவிகளில் இந்திய வம்சாவளியினர் கோலொச்சி வருகின்றனர். அமெரிக்காவின் அதிபருக்கு அடுத்ததாக அதிகாரம் படைத்த துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதனால் அமெரிக்க துணை அதிபர் தேர்தல் இந்தியாவிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரசின் பாதிப்புகள் குறையாத நிலையில், நவம்பர் 3ம் தேதி திட்டமிடப்படி அதிபர் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், குடியரசு கட்சி வேட்பாளராக, தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பைடன் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சியின் சார்பில், துணை அதிபர் வேட்பாளராக கலிபோர்னியாவின் செனட்டராக பதவி வகிக்கும் கமலாதேவி ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலாதேவி ஹாரிஸ், சிறுவயதில் சென்னையில் வசித்து வந்தார். இவரது தாய் சியாமளா தமிழ்ப் பெண். தந்தை ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தனது இளமைப் பருவத்தை நெருங்கும்போது தன் குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். தற்போது கலிபோர்னியாவில் குடும்பத்தினருடன் கமலா ஹாரிஸ் வசித்து வருகிறார். ஹார்வோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த கமலா, கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். அமெரிக்காவில், அட்டர்னி ஜெனரல் பதவியை வகித்து வரும் இவர், இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசியலில் தீவிரமாக களமிறங்கினார். அலமேடா கவுண்டியின் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார்.

ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செனட்டர் தேர்தலில் வெற்றிப்பெற்று கலிபோர்னியாவின் செனட்டராக பதவியில் இருக்கிறார். கலிஃபோர்னியாவின் முதல் பெண் ((மற்றும் முதல் ஆப்ரிக்க அமெரிக்க பெண்)) அட்டர்னி ஜெனரல் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தேர்வில் கடைசி வரை கமலா தேவி ஹாரிசின் பெயர் பரிசீலனையில் இருந்தது. எனினும் கடைசி நிமிடத்தில் ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் துணை அதிபர் வேட்பாளராக கமலா தேவி ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இரண்டு முறை மட்டுமே பெண்கள் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டுள்ளனர். 2008ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் சார்பாக சாரா பாலினும், 1984ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜெரால்டின் ஃபெரொரோவும் போட்டியிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் ((அதிபர் தேர்தலில்)) வெற்றி பெறவில்லை. கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அந்நாட்டின் துணை அதிபராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெறுவார். மேலும் 2024ஆண்டு அதிபர் போட்டியில் மீண்டும் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

Comment

Successfully posted