ஐதராபாத் என்கவுண்டருக்கு கனிமொழி எதிர்ப்பு

Dec 06, 2019 04:13 PM 830

ஐதராபாத் கால்நடை பெண் மருத்துவர் வழக்கில், கைதானவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நிலையில், நரகாசூரனை அழித்துள்ளதாக எண்ணி, பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், நீதிமன்றம் மூலமே தண்டனை கிடைத்திருக்க வேண்டும் என்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் கருத்து அனைவருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலம் தாழ்த்தப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று கூறப்படும் நிலையில், டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று பெற்றோர்கள் குமுறுகின்றனர்.

இந்த நிலையில், கடந்த வாரம், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார். நாட்டையே கொந்தளிப்புக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தில், லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரை, சம்பவம் நடந்த இடத்திற்கு, அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரித்தனர். அப்போது, தப்பிச் செல்ல முயன்றதால், 4 பேரையும் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். என்கவுண்டருக்கு மகளிர் அமைப்பினர், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கெல்லாம் ஒருபடி மேலாக, என்கவுண்டரில் கொல்லப்பட்ட நபர்களின் பெற்றோர்களும், காவல்துறையின் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.

இந்த நிலையில், என்கவுண்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, என்கவுண்டர் மூலம் தீர்வு காண முயல்வது சரியானது அல்ல என்று கூறியுள்ளார். குற்றவாளிகளுக்கு, நீதிமன்றம் மூலமே தண்டனை பெற்று தந்து இருக்க வேண்டும் எனவும், அரசோ, காவல்துறையினரோ தீர்ப்பை கையில் எடுத்துக் கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி பேசியுள்ளார்.

நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரித்துள்ள குடியரசுத் தலைவர், பாலியல் பலாத்கார குற்றவாளிக்கு கருணை காட்ட முடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கனிமொழியின் எதிர் கருத்து அனைவரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது.

Comment

Successfully posted