கவியும், இசையும் பிறந்த தினம் இன்று!!

Jun 24, 2020 01:45 PM 3698

கவியரசர் கண்ணதாசனும் மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் பிறந்த தினம் இன்று. பல முத்தான பாடல்களை இணைந்து கொடுத்த இந்த கூட்டணி பற்றிய ஒரு தொகுப்பை இப்போது பார்க்கலாம்.

இசைக்கு கவி அண்ணனா, கவிக்கு இசை அண்ணனா என்று கேட்டால் இரண்டுமே ஒரு தாய் வயிற்றில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் எனலாம். ஆனால் நம்மை மகிழ்வித்த இந்த கூட்டணியில் இசைக்கு கவிதான் அண்ணன். மெல்லிசை மாமன்னரும் கவியரசரும் ஒரே நாளில் பிறந்திருந்தாலும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஒரு வயது மூத்தவர் கண்ணதாசன்.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்து, நடிக்கும் எண்ணத்தோடு கிளம்பிய  எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளர் டி.ஆர். பாப்பாவை சந்தித்த பிறகு தமக்குள் ஒளிந்துகிடக்கும் இசைத்திறமையை வெளிக்கொண்டு வந்தார். வயலின் கலைஞர் டி.கே.ராமமூர்த்தியுடன் சேர்ந்து இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பிரமணியத்திடம் உதவியாளராக ஆர்மோனியம் வாசித்துக்கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக சி.ஆர்.சுப்பிரமணியம் இறந்துபோகிறார்.  அப்போது அவர் இசையமைத்துக்கொண்டிருந்த தேவதாஸ், சண்டிராணி, மருமகள் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் பொறுப்பு எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும்- டி.கே.ராமமூர்த்திக்கும் வந்துசேர்கிறது.

அத்திரைப்படங்களை முடித்தபிறகு, இருவரும் ஒன்றிணைந்து பணம் திரைப்படத்திற்கு இசையமைத்தனர். என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த அந்த திரைப்படத்திற்கு பாடல் எழுத கண்ணதாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அங்கிருந்து தொடங்கிய எம்.எஸ்.வி. கண்ணதாசன் கூட்டணி காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களைக் கொடுத்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த எம்.எஸ்.வி- ராமமூர்த்தி கூட்டணி எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்குப் பிறகு பிரிந்தது. அப்போது எம்.எஸ்.வியால் தனியாக சோபிக்க முடியாது என்றும், மெல்லிசை ஓய்ந்துவிட்டது என்றும் பலரும் பேசினர். ஆனால் அவற்றுக்கு தமது பாடல்கள் மூலம் பதில் சொன்னார் எம்.எஸ்.வி.
பணம் திரைப்படத்தில் துவங்கிய கண்ணதாசன், எம்.எஸ்.வி கூட்டணி பல திரைப்படங்களில் வெற்றிக்கொடி நாட்டியது.

1949ம் ஆண்டு பிரபல இந்தி இசையமைப்பாளர் நௌஷத் இசையமைத்த தில்லகி திரைப்படத்தில் இடம்பெற்ற ' து மேரா சாந்த்' பாடல் எம்.எஸ்.விக்கு மிகவும் பிடித்துப் போக, அதே பாடலை இன்ஸ்பிரேஷனாக வைத்து ஒரு பாடலை உருவாக்கத் திட்டமிட்டார். அதற்கான களம் அவருக்கு ஊட்டி வரை உறவு திரைப்படத்தில் அமைந்தது. அப்படத்தில் இடம்பெற்ற "பூ மாலையில் ஓர் மல்லிகை பாடலை கண்ணதாசன் எழுதியிருப்பார்.

எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்த காலத்தில்தான் ஸ்ரீதரின் இயக்கத்தில் உரிமைக்குரல் படம் தயாரானது. எம்.எஸ்.வி இசையில் அப்படத்தில் எல்லா பாடல்களையும் வாலி எழுதும்போது ஒரேயொரு காதல் பாடலை கண்ணதாசனை எழுதச் சொன்னார் ஸ்ரீதர். அதுதான் விழியே கதை எழுது பாடல்.

கண்ணதாசன், எம்.எஸ்.வி மற்றும் ராமமூர்த்தி கூட்டணியில் உருவான பாடல்களில் எக்காலத்திற்கும் பொருந்திப் போவது கர்ணன் திரைப்படத்தில் அமைந்த " உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல்" பகவத் கீதையின் சாராம்சத்தை சில வரிகளிலேயே கண்ணதாசனால் எளிமையாக விளக்க முடியும் என நிரூபித்த பாடல். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மெல்லிசை மன்னர் மற்றும் கண்ணதாசனின் புகழ்பாடும் வல்லமை பெற்றது.

கண்ணதாசன் நேரத்திற்கு வராததால் ' இனிமேல் அவனை வச்சுப் பாட்டெழுதப் போவதில்லை" என்று எம்.எஸ்.வி கோபித்துக்கொண்டதும் " சொன்னது நீதானா சொல் சொல்" என்று பாடல் எழுதினார் கண்ணதாசன் என்று கூறப்படுவது உண்டு.

தமக்கு மட்டும் கண்ணதாசன் கிடைத்திருக்காவிட்டால் ஆர்மோனியப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு கேரளாவுக்குச் சென்று பாட்டு வாத்தியாராகியிருப்பேன் என்பார் எம்.எஸ்.வி. அவரை கொஞ்சமும் விட்டுக்கொடுக்காத கண்ணதாசன்... அடுத்த ஜென்மத்தில் தாங்கள் இருவரும் ஒருதாய் வயிற்றில் பிறக்க வேண்டும் என்பார். ஆம்... அவர்கள் ஒருதாய் வயிற்றில் பிறந்திருக்க வேண்டிய உறவுகள்தான் என்பதில் சந்தேகமில்லை.

 

Comment

Successfully posted