குரங்கணி வனப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழையும் கேரள வனத்துறை

Mar 02, 2020 08:47 PM 589

தேனி மாவட்ட வனத்துறையினரால் மலையேற்றத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள குரங்கணி வனப்பகுதிக்குள், சட்டவிரோதமாக கேரள வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

2018 ஆம் ஆண்டு குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற சுற்றுலாப் பயணிகள் 23 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகளும் அங்கு செல்வதற்கு தடைவிதித்து, தேனி மாவட்ட வனத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லியில் இருந்து, தமிழக எல்லையான கொழுக்குமலை வழியாக குரங்கணி வனப்பகுதிகளான திப்பட்டாமலை, மீசைப்புலி மலை, சிங்கப்பாறை போன்ற பகுதிகளுக்கு கேரளா வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மேலும், கொழுக்குமலை சுற்றுலா எனும் பெயரில் கேரள டூரிசம் போர்ட் சுற்றுலா பயணிகளிடம் ஜீப் ஒன்றிற்கு இரண்டாயிரம் ரூபாய் கட்டணம் பெற்றுக்கொண்டு, சட்டவிரோதமாக அவர்களை சிங்கப்பாறை பகுதிக்கு அனுப்பி வருவாய் ஈட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அதிக அளவில் குவிந்து வரும் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் மலைச்சரிவு பகுதிகளுக்கு சென்று புகைப்படம் எடுத்ப்பதுடன் மதுபாடில்களையும் அங்கு வீசிச் செல்கின்றனர். இதனால், தமிழக எல்லப்பகுதியில் வனத்துறையினர் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Comment

Successfully posted