கேரளாவில் கனமழை - 54 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பு

Aug 11, 2018 01:50 PM 444
ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழையால் கேரளாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள சுமார் 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 58 அணைகளில்,  24 அணைகள் நிரம்பி,  சுமார் 40 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.   26 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணையின் 5 ஷட்டர்கள் திறக்கப்பட்டன.  நிலச்சரிவில் சிக்கி 25 பேரும், வெள்ளத்தில் 4 பேரும் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.  பல்லாயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு சுமார்  500 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  சுற்றுலாத் தலமான மூணாறில் நிலச்சரிவில் சிக்கிய அமெரிக்கா, ரஷ்யா, சவுதி அரேபியா நாடுகளைச் சேர்ந்த 22 வெளிநாட்டு பயணிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோரை ராணுவம் மீட்டு, பாதுகாப்பான பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது.   வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்ததன் காரணமாக 54 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.பெரியாறு ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிவரும் வெள்ளத்தால், வெல்லிங்டன் தீவு நீரில் மூழ்கும் என அஞ்சப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தின் மலைப்பகுதிகளுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் தற்காலிக பாலங்கள் அமைத்து மக்களை வெளியேற்றும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இதனால் கேரளாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு அமெரிக்க அரசு தனது நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.   Operation Madad என்ற பெயரில் கடற்படை மீட்பு பணியை தீவிரப்படுத்தி வருகிறது. 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய வெள்ளத்தை கேரளா சந்தித்துள்ளதாக மத்திய அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். கேரளாவில் அமைக்கப்பட்ட பெண் கமாண்டோ படை வீரர்கள் முதன்முறையாக இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted