வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு காங். பா.ஜ.க.வை பின்தொடர்கிறது - கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றச்சாட்டு

Dec 06, 2018 02:59 PM 205

சபரிமலை விவகாரத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குவங்கியை கருத்தில் கொண்டே, பா.ஜ.க.வை காங்கிரஸ் கட்சி பின்தொடர்வதாக கேரள அறநிலையத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கேரளாவில் இந்து அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 7 நாட்களாக நடைபெற்றுவரும் அம்மாநில சட்டப்பேரவை கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலித்துள்ளது. சபரிமலை விவகாரத்தை வைத்து எதிர்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தல் மற்றும் அதன் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டே சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க.வை பின்தொடர்வதாக சட்டப்பேரவையில் தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் விதத்திலேயே மாநில அரசு செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted