உடலில் காயம்; 100பவுன் தங்கம் போதவில்லை - வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த பெண்

Jun 25, 2021 10:50 AM 1849

கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஸ்மயா நாயர் ஆயுர்வேதா மருத்துவ மாணவி. இவருக்கும் கிரண் குமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜீன் மாதம் திருமணம் நடைபெற்றது. கணவர் கிரண்குமார் போக்குவரத்து துறையில் பணியாற்றி வருகிறார். விஸ்மயா நாயரை திருமணம் முடித்துகொடுத்த போது, அவரது தந்தை திரிவிக்ரமன் நாயர், 100 பவுன் நகை, ஒரு ஏக்கர் நிலம், 10 லட்சம் மதிப்புள்ள காரை வரதட்சணையாக கொடுத்துள்ளார். ஆனால், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர், `இது போதாது கூடுதலாக கொண்டு வா!’ என்று கொடுமைப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில், வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் குளியலரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் விஸ்மயா நாயர். இந்த சம்பவம் கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு `காட்டுமிராண்டி தனமான வரதட்சணை முறை’ என்று சுட்டிக்காட்டியுள்ள அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், சிறப்பு அதிகாரிகள் இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ``சமூகத்தில் நடைமுறையில் உள்ள திருமண முறையை சீர்திருத்த வேண்டும். திருமணம் என்பது குடும்பத்தின் சமூக அந்தஸ்து மற்றும் ஆடம்பரத்தை மையமாக கொண்டு இருக்க கூடாது. காட்டுமிராண்டித்தனமான வரதட்சணை முறையானது மகள்களை வெறும் பொருட்களாக மாற்றி  இழிவுபடுத்துகிறது என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். நாம் அவர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

image

கொல்லத்தில் உள்ள தனது கணவன் வீட்டின் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட விஸ்மயா இறப்பதற்கு முன்பு தனது பெற்றோருக்கு வாட்ஸப்பில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தும் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும் தனது தலைமுடியை பிடித்து இழுத்து கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக உயிரிழந்த விஸ்மயாவின் சகோதரன் விஜித் கூறுகையில்,  “என் தங்கையின் மரணம் என்பது தற்கொலை அல்ல; கொலை. வரதட்சணை கொடுமையால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். 

“கடந்த ஜனவரி மாதம் எங்கள் வீட்டுக்கு வந்த விஸ்மயாவின் கணவர், எங்கள் கண்முன்பாகவே என் மகளை தாக்கினார்” என்று கண்ணீர்மல்க பேசுகிறார் அவரது தந்தை. கல்வியறிவு மிகுந்த மாநிலமாக கூறப்படும் கேரளாவில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Comment

Successfully posted