சென்னையில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

Nov 01, 2018 10:41 AM 531

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில், இணை ஆணையர் அறையில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கு உரிய விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள மாநில தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புதுறையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். தீபாவளி பண்டிகையின்போது தனியார் அலுவலகங்களுடன் போனஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் சமரச தீர்வு காண லஞ்சம் மற்றும் பரிசு பொருட்களை பெறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இந்த சோதனையை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பொன்னுசாமி அறையில் இருந்து கணக்கில் காட்டப்படாத 15 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைப்பற்றினர்.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் பொன்னுசாமிக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதேபோன்று பொதுப்பணித்துறை கொதிகலன் துறையிலும் சோதனை நடைபெற்றது.

Comment

Successfully posted