ராஜஸ்தானில் வெட்டுக்கிளி பிரியாணி அமோக விற்பனை!!

May 31, 2020 12:31 PM 5308

நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் கொரோனா ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், வட மாநிலங்களில் கூடுதல் பிரச்சனையாக வெட்டுக்கிளியும் சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆப்ரிக்காவிலிருந்து கிளம்பிய பாலைவன வெட்டுக்கிளிகள் ஈரான், பாகிஸ்தான் நாடுகளில் விவசாயப் பயிர்களை சூறையாடிவிட்டு குஜராத்தில் 17 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான சீரகப் பயிர்களை நாசம் செய்தன. பிறகு மத்தியப்பிரதேசத்தில் படையெடுத்த அவை இப்போது ராஜஸ்தானில் தாக்குதல் நடத்திவருகின்றன. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுப்பது என்று அரசு குழம்பியுள்ள நிலையில், அவற்றைப் பிடித்து சுவையான பிரியாணி செய்து விற்க சிலர் உணவகங்கள் தொடங்கிவிட்டனர்.

ராஜஸ்தானின் தார், ஜெய்ப்பூர், உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்கிளி பிரியாணி, லோகஸ்ட் ஃபிரை, லோகஸ்ட் 65 போன்ற உணவுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. வெட்டுக்கிளிகளை சமைப்பதற்கு முன்பு அவற்றின் கால், இறக்கைகளை நீக்கி நன்றாக சுத்தம் செய்துவிட்டு சமைக்க வேண்டும் என்கின்றனர் உணவக உரிமையாளர்கள்.

வெட்டுக்கிளிகள் பொதுவாகவே புரதச்சத்து நிறைந்தவை. மெக்சிக்கோவிலும் சீனாவிலும் இதை உணவாக உட்கொள்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது ராஜஸ்தானும் சேர்ந்துள்ளது. கொன்றால் பாவம் தின்றால் போச்சு எனும் அடிப்படையில், விவசாயப் பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகளை வறுத்து தின்று வருத்தத்தை போக்கிக்கொள்கின்றனர் ராஜஸ்தான் மக்கள்.

Comment

Successfully posted