வளர்ந்த நாடுகளைப் போல நடைபாதைகள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு

Aug 14, 2019 06:10 PM 131

மக்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக வளர்ந்த நாடுகளில் உள்ளது போல நடைபாதைகளை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது காணலாம்

வளர்ந்த நாடுகளில் மக்கள் ஆரோக்கிய வாழ்விற்காக நடை பயணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அரசாங்கமும் அவர்களுக்கான ஒத்துழைப்பை நல்கி நடைபயணத்தை ஊக்குவிக்க வாகன பாதைகளை விட நடைபாதைகள் மேல் அக்கறை செலுத்துகிறது.

அதேபோல சென்னை மக்களின் உடல் ஆரோக்கியத்தின் மேல் அக்கறை கொண்ட சென்னை மாநகராட்சி மாநகர் முழுவதும் சாலைகளின் தரத்தை உறுதி செய்வதோடு நடை பாதையையும் விரிவுப்படுத்தியுள்ளது.

சென்னையில் பேருந்து செல்லக்கூடிய 471 சாலைகளின் நடைபாதையை விரிவுப்படுத்த முடிவெடுத்துள்ளது. அதன்படி சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள எழும்பூர், புரசைவாக்கம், தியாகராய நகர், பெசண்ட் நகர், திருவான்மியூர் போன்ற பகுதிகளில் உள்ள நடைபாதையை விரிவுப்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சியின் இந்த முயற்சி மூலமாக வெளிநாடுகளை போல பொதுப்போக்குவரத்தையும் நடைபாதையும் மக்கள் அதிகம் பயன்படுத்தி உடல் அரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்கின்றார் இத்திட்டத்தின் தலைமை பொறியாளர்.

இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் துண்டு துண்டாக இருந்த நடைபாதைகள் மக்களின் வசதிக்கேற்ப சற்று விரிவுப்படுத்தப்பட்டு ஒரே சீரான நடைபாதையாக மாற்றப்பட்டுள்ளது.

நடைபாதைகளுக்கு நடுவே சுகாதாரமற்ற முறையில் அமைந்துள்ள குப்பைத்தொட்டிகளையும், மின்சாரப் பெட்டிகள் அனைத்தையும் மக்களுக்கு இடையூறு ஏற்படாத இடங்களில் அமைத்து மக்கள் அதிகளவு நடைபாதையை பயன்படுத்த வழிவகை செய்துள்ளனர்.

மேலும் நடைபாதைகளின் மேல் வாகனங்கள் செல்வதை தவிர்க்க கற்களால் ஆன தடுப்புகள், நடைபாதைகள் மேல் இருக்கும் மரங்களும் சுவாசிக்க சல்லடை வளையங்கள் என அனைத்தும் மக்களின் மனதறிந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நந்தகுமார் தெரிவித்தார்.

நடைபாதையின் அழகை சீர்குலைக்காத வகையில் வைஃபை வசதியுடன் கூடிய நவீன பேருந்து நிலையங்களும், மழைநீர் வெளியேறும் வடிகால்கள் என அனைத்தும் மக்களின் கருத்தை பெற்றே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நடைபாதைகளில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வணிகம் மேற்கொண்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 2020ம் ஆண்டுக்குள் இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு எழில்மிகு தோற்றத்தை சென்னை மாநகராட்சி பெறும் என்று நம்பிக்கை வைக்கிறார் நந்தகுமார்.

சென்னையை அடுத்த பரிமாணத்திற்கு கொண்டு செல்ல சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Comment

Successfully posted