மேற்கு வங்கத்தில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ்

May 03, 2021 11:27 AM 972

மேற்குவங்க தேர்தல் முடிவுகள், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

 

 

மேற்குவங்க சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளில், 292 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்தத் தேர்தல் பிரதமர் மோடிக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையேயான நேரடி மோதலாகவே கருதப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை துவங்கிய சில மணி நேரங்களிலேயே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 146 இடங்களை தாண்டி 200 க்கும் மேற்பட்ட இடங்களின் வென்றது.

இதன்மூலம் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

 

மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அம்மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், பாஜக அலுவலகத்தின் முன் குவிந்த திரிணாமுல் தொண்டர்கள் வெற்றியைக் கொண்டாடினர்.

இதையடுத்து அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் திரிணாமுல் தொண்டர்களை அப்புறப்படுத்தினர்.

இதேபோல் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, இந்தமுறை 75 க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

200க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வென்று ஆட்சியைப் பிடிப்போம் என பிரசாரம் செய்து வந்த நிலையில், தேர்தல் முடிவுகள், அக்கட்சிக்கு பின்னடைவாக அமைந்தது.

அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான முகுல் ராய் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், பல தலைவர்கள் தோல்வியைத் தழுவினர்.

எனினும் அம்மாநிலத்தின் 2வது பெரிய கட்சி என்ற இடத்தைத் தக்கவைத்துள்ளது.

 

 

முன்பு அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.  இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இதேபோல் சிறுபான்மையினரின் வாக்குகளைப் குறிவைத்து அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற கூட்டணியும், ஒரு தொகுதியுடன் கணக்கை முடித்துக் கொண்டது.

இதனிடையே முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா, இது மேற்குவங்க மக்களுக்கான வெற்றி என குறிப்பிட்டார்

 

 

Comment

Successfully posted