அறந்தாங்கி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த நபர் கைது!

Jul 03, 2020 07:40 PM 1246

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொன்று வீசிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள அந்தச் சம்பவம் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு...

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி, கடந்த 30-ஆம் தேதி காணாமல் போனார். அதையடுத்து, அவரைப் பல இடங்களில் தேடிய அவரது பெற்றோர், எங்கும் சிறுமி இல்லாத நிலையில், ஏம்பல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஏம்பல் காவல்துறையினர், கடந்த 1-ஆம் தேதி மோப்பநாய் உதவியுடன் சிறுமியைத் தேடினர். அப்போது, கருவேல மரங்கள் அடர்ந்த, வண்ணாங்குளம் ஊரணிக்கரையில் சிறுமியின் சடலம் கிடைத்தது. பார்க்கவே அச்சப்படும் அளவுக்கு சிதைக்கப்பட்டிருந்தது சிறுமியின் உடல். அதையடுத்து புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, சிறுமியின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியானதில், சடலமாகக் கிடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

இதற்கிடையில், சிறுமியின் கொலைக்குக் காரணமானவரைத் தேடி வந்த காவல்துறையினர், சந்தேகத்தின்பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான ராஜேஷ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதன்பிறகு கடுமையாகத் தாக்கிக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அதையடுத்து ராஜேஸ் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகத்தை உறைய வைத்த இந்தச் சம்பவத்திற்கு அதிர்ச்சி தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கியும் உத்தரவிட்டுள்ளார்.

Comment

Successfully posted