பலவித விமர்சனங்களுடன் ட்ரெண்டாகும் மரைக்காயர்

Dec 03, 2021 12:55 PM 2053

‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்குப் பின்னர் வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘மரைக்காயர்’ படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், பிரபு, அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், அசோக் செல்வன், பிரணவ் மோகன்லால், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், நெடுமுடி வேணு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஆனால், இவ்வளவு பெரிய பிரமாண்ட கூட்டணியை வைத்துக்கொண்டு ‘மரைக்காயர்’ நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

16ம் நூற்றாண்டில் கோழிக்கோடு நாட்டை ஆட்சி செய்த சாமூத்ரி ராஜ்ஜியத்தின் கடற்படை தளபதிகளாக வீரசாகசம் புரிந்தவர்கள் குஞ்ஞாலி மரைக்காயர் வம்சத்தினர். அவர்களில் நான்காவது மரைக்காயராக இருந்த முஹம்மது அலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றுப் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.

போரில் தந்தையையும், அதன் பின்னர் தனது குடும்பத்தையும் இழந்த முஹம்மது அலி குஞ்ஞாலியாக மோகன்லால், இவர் செல்வந்தர்களிடம் இருந்து கொள்ளையடித்து அவைகளை ஏழைகளுக்கு வாரி வழங்குகிறார்.

அதேநேரத்தில் போர்ச்சுகீசியர்கள் கோழிக்கோடு மீது படையெடுக்க, குஞ்ஞாலி மரைக்காயர் கடற்படை தளபதியாக நியமிக்கப்படுகிறார். அதேவேகத்தில் போர்ச்சுகீசியர்களையும் வென்று சாமூத்ரி ராஜ்ஜியத்தில் தனக்கென ஒரு இடத்தையும் பிடிக்கிறார்.

இந்நேரத்தில் குஞ்ஞாலியின் தளபதியாக வரும் சீனாவைச் சேர்ந்த நபருக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இடையே காதல் மலர்கிறது. இதுவே சாமூத்ரிகர்களுக்கும் குஞ்ஞாலி மரைக்காயருக்கும் இடையில் பகையை மூட்ட இறுதியில் என்ன ஆனது என்பது தான் மீதி கதை.

குஞ்ஞாலி மரைக்காயரின் வரலாறு குறித்து ஏதேனும் முகநூல் பதிவை படித்தால் கூட, அவர்களின் வீரதீரத்தைக் கண்டு படிப்பவர்களுக்கு புல்லரிக்கும். ஆனால், இதில் பாதியைக் கூட ‘மரைக்காயர்’ படம் பதிவு செய்யவில்லை.

முதல் பாதியில் காட்சிகள் கோர்வையே இல்லாமல் தனித்தனியாக பயணிப்பதாகத் தெரிகிறது.

நீளமான பலூனில் காற்றை ஊதும்போது இடையில் மூச்சு விட்டுவிட்டால், மீண்டும் பலூனை ஊதி பெரிதாக்க வேண்டும். அப்படித்தான் இப்படத்தின் திரைக்கதையும், திடீரென வீரியம் அடைகிறதே என நிமிர்ந்து உட்கார்ந்தால், அதேவேகத்தில் பலவீனமடைந்து ரசிகர்களை அயர்ச்சிக்குள்ளாக்குகிறது.

இயக்குநர் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தையும் பிரமாண்டத்தையும் நம்பிய அளவிற்கு திரைக்கதையில் கவனம் செலுத்தவில்லை.

படத்தில் மொத்தமே இரண்டு போர்க் காட்சிகள் தான் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளன, அதில் ஒன்று கடலிலும் இன்னொன்று நிலப்பரப்பில் நடப்பதாகவும் உள்ளன. 

பொதுவாக போர்க் காட்சிகளை கழுகுப் பார்வையில் படமாக்க வேண்டும், அப்போது தான் அது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும், இங்கே அதிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

போர் வீரர்களோடு வீரர்களாக ஓடியாடும் கேமரா, க்ளோஸ் அப் காட்சிகளாக சுட்டுத் தள்ளியிருக்கிறது. குறிப்பாக போர்ச்சுகீசியர்களுடனான போர்களில் மரைக்காயர்களின் தனித்துவமான செயல்பாடுகளாக வியப்பை ஏற்படுத்துவது அவர்களின் கொரில்லா முறையிலான போர் யுக்தி. அவைகள் மருந்துக்கும் கூட இப்படத்தில் இடம்பெறாதது மரைக்காயர்களின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றம்.

image

ஏற்கனவே துடுப்பில்லாத படகாய் தத்தளித்துக்கொண்டிருக்கும் திரைக்கதையில், கீர்த்தி சுரேஷின் காதல் காட்சிகளும் அடுத்தடுத்து வரும் இரண்டு பாடல்களும் சோதனை.

ஹீரோ மோகன்லால் திரையில் குஞ்ஞாலியாக பார்ப்பதற்கு பேரூருவமாக காட்சியளித்தாலும், போர்க் காட்சிகளில் வேகம் காட்ட முடியாமல் திணறியிருக்கிறார்.

அவருக்குப் பிறகு கவனம் ஈர்ப்பது அர்ஜுனும், நெடுமுடி வேணுவும் தான், பிரபு, சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் ஆங்காங்கே வந்து போகின்றனர். ராகுல் ராஜ்ஜின் இசை, திருவின் ஒளிப்பதிவு சில இடங்களில் ரசிக்க வைத்துள்ளன.

படத்தில் சில குறைகள் இருந்தாலும் இப்படியான புதிய முயற்சிக்காக பாராட்டலாம்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை குஞ்ஞாலி மரைக்காயருக்கு நிகழும் துரோகங்கள் மட்டுமே அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவைகள் உண்மையான வரலாற்றில் இருந்து கொஞ்சம் மாறுதலாகவே உள்ளன.

- அப்துல் ரஹ்மான்

Comment

Successfully posted