இன்று முதல் 137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு

Aug 13, 2019 11:19 AM 108

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. முதற்கட்டமாக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு படிப்படியாக 10,000 கனஅடி வரை பாசன தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும். இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 16 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசன பகுதிகளுக்காக இன்று முதல் 137 நாட்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்படி மேட்டூர் கால்வாயில் வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள சுமார் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் போது அணை மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது . அணையின் கீழ் பகுதியில் 7 கதவணை நீர்மின் நிலையங்கள் மூலம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 102 அடியாகவும், நீர் இருப்பு 66.431 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்காக நீர் வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 53 ஆயிரம் கனஅடியில் இருந்து 2 லட்சத்து 30 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

Comment

Successfully posted